

திருவள்ளூரில் பெண் போலீஸ் உடனான நட்பு விவகாரத்தில் ஆயுதப் படை போலீஸ்காரர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பெண் போலீஸ் உட்பட திருவள்ளூர் ஆயுதப் படை போலீஸார் 4 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், அந்த போலீஸாரில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் ஆயுதப் படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் சரண்யா(23). தேனி மாவட்டம், கொம்பை கிராமத்தைச் சேர்ந்த இவருக்கு திருமணமாகி ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. அதே போல், சென்னை ஆயுதப் படை போலீஸாக இருப்பவர் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தராஜ்(25).
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரண்யாவும், அமிர்தராஜும் டெல்லியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் பணிபுரிந்தபோது இருவருக்குமிடையே நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த தொடர்பு தமிழகம் வந்த பிறகும் நீடித்துள்ளது.
மோதல்
இந்நிலையில், திருவள்ளூர் ஆயுதப் படையில் போலீஸ்காரராக பணிபுரியும் சிவகங்கை மாவட்டம், கொந்தகை பகுதியைச் சேர்ந்த கல்லணைக்கும், சரண்யாவுக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, தவறான நட்பாக உருமாறியதாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த அமிர்தராஜ், கல்லணையை அலைபேசியில் தொடர்புகொண்டு எச்சரித் துள்ளார். இதனால், கல்லணை மற்றும் அவருடன் பணிபுரியும் திருவள்ளூர் ஆயுதப் படை போலீஸ்காரர்களான மதுரை மாவட்டம் - உசிலம்பட்டியைச் சேர்ந்த சுந்தரபாண்டி(23), உத்தமபாளையத்தைச் சேர்ந்த சந்திரன்(24), மதுரையைச் சேர்ந்த சந்தானகுமார்(26) ஆகியோர் மிகுந்த கோபத்தில் இருந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 4-ம் தேதி இரவு, திருவள்ளூர் ஊத்துக்கோட்டை சாலையில் உள்ள சரண்யா வசித்து வரும் வீட்டில் அமிர்தராஜ் இருப்பதை அறிந்துகொண்ட கல்லணை மற்றும் சுந்தரபாண்டி, சந்திரன், சந்தானகுமார் ஆகிய 4 பேரும், சரண்யா வீட்டுக்கு இரவு 11 மணியளவில் சென்றுள்ளனர்.
அப்போது கல்லணை தரப்பினருக்கும், அமிர்தராஜுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், அமிர்தராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுந்தரபாண்டியைக் கொலை செய்தார். இந்த மோதல் சம்பவத்தில் சரண்யாவின் சகோதரி தேவி, தாத்தா சுருளியப்பன் மற்றும் ஆயுதப் படை போலீஸ்காரர் சந்திரன் ஆகியோர் லேசான காயமடைந்தனர்.
இந்தக் கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த திருவள்ளூர் டவுன் போலீஸார், சென்னை ஆயுதப் படை போலீஸ்காரர் அமிர்தராஜை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
போலீஸார் 3 பேர் கைது
இந்நிலையில், திருவள்ளூர் ஆயுதப் படை போலீஸ்காரர் சுந்தரபாண்டி கொலை சம்பவம் தொடர்பாக மட்டுமல்லாமல், சரண்யா வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து மோதலில் ஈடுபட்டது தொடர்பாகவும் கல்லணை தரப்பினர் மீது திருவள்ளூர் டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்ததுடன், திருவள்ளூர் ஆயுதப் படை போலீஸ்காரர்களான சந்திரன், கல்லணை, சந்தானகுமார் ஆகிய 3 பேரை போலீஸார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
4 போலீஸார் பணியிடை நீக்கம்
திருவள்ளூர் ஆயுதப் படை போலீஸ்காரர் சுந்தரபாண்டி கொலை சம்பவத்தில் தொடர்பு டைய திருவள்ளூர் ஆயுதப் படை பெண் போலீஸ் சரண்யாவையும், சரண்யா வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து மோதலில் ஈடுபட்டதால் போலீஸ்காரர்கள் சந்திரன், கல்லணை, சந்தானகுமார் ஆகி யோரையும் பணி இடை நீக்கம் செய்ய காஞ்சிபுரம் சரக டிஐஜி நஜ்மல் கொடா உத்தரவிட்டதைத் தொடர்ந்து திருவள்ளூர் எஸ்.பி. சாம்சன், நேற்று முன்தினம் நள்ளிரவு சரண்யா, சந்திரன், கல்லணை, சந்தானகுமார் ஆகிய 4 பேரையும் பணி இடை நீக்கம் செய்தார்.