Published : 15 Dec 2013 03:22 PM
Last Updated : 15 Dec 2013 03:22 PM

இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்: மத்திய அரசுக்கு திமுக வலியுறுத்தல்

இலங்கையின் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மீது நம்பகமானதும், சுதந்திரமானதுமான சர்வதேச விசாரணை நடத்தவும் மத்திய அரசு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.

மேலும், விலைவாசி உயர்வுக்கு மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம், மீனவர் பிரச்சினையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள், திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

சென்னையில் இன்று (ஞாயிற்றுகிழமை) திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்த அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் முக்கிய அம்சங்கள்:

* தென் ஆப்பிரிக்க முன்னால் அதிபர் நெல்சன் மண்டேலா மறைவுக்கு இரங்கல்.

* ஏற்காடு இடைத்தேர்தலின்போது உயிரிழந்த தியாகதுருகம் ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர் ராஜமுருகன் மறைவுக்கு இரங்கல்.

* 'நெஞ்சுக்கு நீதி' ஆறாம் பாகத்தை எழுதிய திமுக தலைவர் கருணாநிதி பாராட்டு.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு:

* ஜெயலலிதா 2011-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நாள் முதல் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு என்பது, தினம் தினம் சிதைந்து, சின்னாபின்னமாகி கிடக்கின்ற நிலைமை, இந்த ஆட்சியில் உருவாகியுள்ளது.

வீட்டுக்கு வீடு ஒரு காவல் நிலையம், வெளியில் செல்லும் ஆண்களுக்கும், பெண்களுக்கும், ஆயுதம் ஏந்திய காவலர் படை பாதுகாப்பு தேவை என்கின்ற அபாயகரமான கட்டத்தை தமிழ்நாட்டு மக்கள் வெகுவிரைவில் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை ஜெயலலிதா அரசுக்கு சுட்டிக்காட்டி, திமுக கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

* ஏற்காடு இடைத்தேர்தலில் தி.மு.கழக வேட்பாளருக்கு 64,655 ஆயிரம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை அளித்தமைக்காக நன்றி.

* கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாத ஜெயலலிதா அரசுக்குக் கண்டனம்.

* பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கோமாரி நோய்க்கு நிவாரணம் அளிக்கப்பட வேண்டும்.

* கரும்பு கொள்முதல் விலையை குறைந்தபட்சம் டன் ஒன்றுக்கு 3,500 ரூபாயாவது வழங்கிட அரசு முன் வர வேண்டும்.

மீனவர் பிரச்சினை

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்தும், மத்திய அரசும், மாநில அரசும், இதுவரையிலும் உரிய நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை.

இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளும் சந்தித்துப் பேசி, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண மத்திய அரசு தமிழக அரசோடு தொடர்பு கொண்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் மாநில அரசு இந்த முக்கியப் பிரச்சினையில் காலதாமதம் செய்து வருகிறது.

எனவே, நெருக்கடியான இந்தச் சூழ்நிலையில் இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக இரு நாடுகளின் மீனவர் பிரதிநிதிகளை அழைத்து சமரசப் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு திமுக வலியுறுத்துகிறது.

* நெசவுத் தொழிலை நசுக்கி - நெசவாளர்களை துயரத்தில் ஆழ்த்திடும் வகையில், அவர்களிடமிருந்து பன்மடங்கு நிலையான மின்கட்டணம் மற்றும் அதற்குரிய வரி ஆகியவற்றை வசூலித்து வருவதை திமுக பொதுக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

விலைவாசி உயர்வு

* அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்வு என்பது தமிழ்நாட்டு மக்களை பெரிதும் பாதித்துள்ளது. மாதந்தோறும் நிகழ்ந்து வரும் விலை ஏற்றத்தால் ஏழையெளிய, நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

இத்தகையோரின் வருவாயையும், வாங்கும் சக்தியையும் கருத்தில் கொண்டு, மத்திய மாநில அரசுகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து, அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தி மக்கள் நிம்மதியாக வாழ்க்கை நடத்துவதற்கான வழிவகை காணத் தவறியதற்காக, மத்திய, மாநில அரசுகளுக்கு இப்பொதுக்குழு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

சேது சமுத்திர திட்டம்

* உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பாக, திட்டப்பணிகள் தொடங்குவதற்குச் சாதகமாக பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கினை விரைவுபடுத்தி முடித்து, சேது சமுத்திரத் திட்டப்பணிகளை மீண்டும் தொடங்கிட வேண்டும் என மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறத

* தி.மு.க. அரசு ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் என்ற ஒரே காரணத்தால் காழ்ப்புணர்ச்சியோடு ஜெயலலிதா அரசு, தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை நிறைவேற்ற ஒத்துழைக்காமல் இருக்கிறது. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் தொழில் வளர்ச்சிக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஜெயலலிதா அரசின் இந்தப் போக்கினை இந்தப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

* நெல்லை மாவட்டம், மகேந்திரகிரியில் "இந்திய வான்வெளி - திரவ எரிவாயு மையம்" மற்றும் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் "இரண்டாவது ராக்கெட் ஏவுதளம்" அமைப்பதன் மூலம் அந்த மண்டலமே வளர்ச்சி பெற்ற மண்டலமாக நிச்சயம் மாற்றமடையும் என்பதோடு நமது நாட்டில் தொழில் நுட்பப் புரட்சிக்கு வித்திடும் பகுதியாகவும் அது உருவாகும். எனவே இந்த இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களை அமைப்பது குறித்து உரிய நடவடிக்கையை உடனடியாக மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

அட்டப்பாடி தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும்

கேரள மாநிலம், அட்டப்பாடி பகுதியில் வாழ்ந்து வரும் தமிழர்கள் அனைவரும் தங்களுக்குச் சொந்தமான நிலங்களை அப்படியே விட்டு விட்டு வெளியேற வேண்டும் என்று கேரள அரசு ஆணையிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அட்டப்பாடியில் தமிழர்கள் விவசாயம் செய்து வருகின்ற நிலங்கள், பழங்குடி இன மக்களுக்குச் சொந்தமானவை என்றும், பழங்குடியினரின் நிலங்கள், அவர்களுக்கே சொந்தம் என்று உச்ச நீதி மன்றத் தீர்ப்பின்படி தமிழர்கள் தங்களின் நிலங்களை பழங்குடியினரிடமே ஒப்படைக்க வேண்டுமென்று கேரள அரசு கூறுகிறது.

பழங்குடியின மக்களுக்குச் சொந்தமான நிலங்களை தமிழர்கள் ஆக்கிரமிக்க வில்லை. எனவே தமிழக அரசு இந்தப் பிரச்சினை குறித்து உடனடியாகக் கவனித்து, கேரள அரசுடனும், மத்திய அரசுடனும் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து அட்டப்பாடியில் காலம் காலமாக இருந்து வரும் தமிழர்களைக் காப்பாற்றிட முன் வர வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

சிங்கப்பூர்த் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும்

8-12-2013 அன்று சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் சத்திரத்தைச் சேர்ந்த சக்திவேல் மகன் குமாரவேலு பேருந்து விபத்தில் மரணமடைந்ததைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் கூடியிருந்த தமிழர்கள் உணர்ச்சி வசப்பட்டதால் ஏற்பட்ட விரும்பத்தகாத கலவரத்தையொட்டி இருபதுக்கும் மேலான தமிழர்கள் கைது செய்யப்பட்டும், தொடர்ந்து மேலும் பலரை கைது செய்துகொண்டும், வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்து சிங்கப்பூர் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதனால் சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழர்கள், தங்களது எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற பெரும் அச்சத்தோடு வாழ்ந்து வருகிறார்கள். இந்த அச்சத்தைப் போக்கி அமைதியாகப் பணிபுரிவதற்கு சிங்கப்பூர் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழர்களைப் பாதுகாத்திடத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது நடவடிக்கை

அ.தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க. முன்னணியினர் மீது ஆதாரப்பூர்வமாக புகார்கள் கொடுக்கப்பட்டும் இதுவரையில் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் அமைச்சர்கள், முன்னணியினர் மீது அடிப்படை ஆதாரங்கள் கூட இல்லாமல் சிலரால் கொடுக்கப்பட்ட பொய்ப் புகார்களின் அடிப்படையில் கிரிமினல் வழக்குகள் தொடுக்கப்பட்டு இன்று வரையில் நடந்து கொண்டிருக்கிறது.

அ.தி.மு.க.வினர் மீது கொடுக்கப்பட்ட ஆதாரப்பூர்வமான புகார்கள் மீது அ.தி.மு.க. அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்காததை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

* தி.மு. கழக ஆட்சியில் நியமனம் செய்யப்பட்டவர்கள் என்பதால், மக்கள் நலப் பணியாளர்கள் மீது அ.தி.மு.க. அரசு கொண்டிருக்கும் பழி வாங்கும் போக்கை கை விட்டு உயர்நீதி மன்றம் தீர்ப்பளிக்கும்வரை காத்திருக்காமல், மக்கள் நலப் பணியாளர்களையும், அவர்களுடைய குடும்பத்தினரையும் காப்பாற்றிட முன் வரவேண்டுமென்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

ஈழத் தமிழர் பிரச்சினையில் நிரந்தர அரசியல் தீர்வு

இலங்கையில் வடக்கு மாகாணத் தேர்தல் முடிந்து முதல்வர் விக்னேஸ்வரன் தலைமையில் மாகாணக் கவுன்சில் அமைந்துள்ளது. இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தத்தின்படி பல அதிகாரங்கள் தமிழர்களுக்கு வழங்கப்படும் என்பது இலங்கையில் ஏட்டுச் சுரைக்காயாகவே இருந்து வருகிறது.

13வது சட்டத் திருத்தத்தின்படி நில நிர்வாகம், உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள காவல் துறை நிர்வாகம் அனைத்தும் இராஜபக்சே அரசின் கையில் உள்ளது. மாகாணக் கவுன்சிலைக் கூட்டுவதும், கலைப்பதும் ராஜபக்சே அரசின் மாகாண ஆளுநரின் கைகளில் உள்ளது. முதல்வர் விக்னேஸ்வரன் தலைமையில் உள்ள அமைச்சரவையின் பரிந்துரைகளை ஏற்பது அல்லது நிராகரிப்பதற்கான அதிகாரம் மாகாண ஆளுநருக்கும் ராஜபக்சேக்கும்தான் உள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முழுவதும் நீர்த்துப் போன அரசியல் அதிகாரப் பங்கீடுகளே அனுமதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள தமிழர்களின் விருப்பத்திற்கேற்றவாறு நிரந்தரமான அரசியல் தீர்வு அமைய, வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையில் "பொது வாக்கெடுப்பு" நடத்தவும்; தமிழினப் படுகொலை, போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மீது நம்பகமானதும், சுதந்திரமானதுமான சர்வதேச விசாரணை நடத்தவும் மத்திய அரசு ஐ-நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிடவும் வலியுறுத்துவதோடு, இடைக்கால நிவாரணமாக முழுமையான அதிகாரங்கள் தமிழர்களுக்குக் கிடைத்திடும் வகையில், 13வது சட்டத் திருத்தம் அமைந்திட இலங்கை அரசை வலியுறுத்தி தமிழர்களின் விருப்பத்தை நிறைவேற்றிடவாவது இந்திய அரசு முன்வர வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x