

மாயமானதாகக் கூறப்பட்ட மதுரை அதிமுக முன்னாள் மண்டலத் தலைவர் மகனை கடத்திச் சென்று எரித்துக் கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக திமுக பிரமுகர் மகன் உட்பட 3 பேரை போலீஸார் பிடித்து விசாரிக்கின்றனர்..
மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் ராஜபாண்டியன். அதிமுகவைச் சேர்ந்த இவர் மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவராக இருந்தார். இவரது மகன் முனியசாமி (எ) தொப்புளி முனியசாமி(40). இவர் மதுரை யாகப்பா நகர் ஸ்டெல்லா தெருவில் குடும்பத்தினருடன் வசித்தார்.
இவர் கடந்த 13-ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றார். ஆனால் முனியசாமி மீண்டும் வீடு திரும்பவில்லை என அவரது மனைவி உமா மகேஸ்வரி(36) மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் முனியசாமி மாயமானதாக வழக்கு பதிவு செய்து அவரை தேடினர்.
இந் நிலையில், செங்கல்பட்டு அருகே வாகன சோதனையில் மதுரையைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் சிக்கினார். விசாரணையில், அவர் மதுரை முன்னாள் மண்டலத் தலைவர் மகன் தொப்புளி முனியசாமியை கடத்திக் கொலை செய்து, கமுதி அருகே கோவிலாங்குளத்தில் எரித்ததாகப் போலீஸாரிடம் தெரிவித்தார்.
போலீஸார் சுபாஷை நேரில் அழைத்து வந்து, சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். அங்கு உடலை எரித்ததற்கான தடயம் எதுவும் சிக்காத நிலையில், ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்தனர். தொப்புளி முனியசாமியை தேடும் பணியையும் தீவிரப்படுத்தினர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் மதுரை வந்த 12 அமைச்சர்கள் முன்னிலையில் தொப்புளி முனியசாமியின் குடும்பத்தினர் முறையிட்டனர். இவ்வழக்கில் என்ன நடந்தது என்ற உண்மையை ஒரே நாளில் போலீஸார் கண்டுபிடிப்பர் என அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்தார்.
இதையடுத்து விசாரணையை போலீஸார் தீவிரப்படுத்தினர். இதற்கிடையில் சுபாஷிடம் நடந்த தொடர் விசாரணையில், தொப்புளி முனியசாமியை கும்பல் ஒன்று காரில் கடத்திச் சென்று கமுதி அருகே எரித்துக் கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
இது குறித்து போலீஸார் கூறியது:
முதலில் மறுத்த சுபாஷ் பின்னர் உண்மையை ஒப்புக்கொண்டார். கடந்த 13-ம் தேதி வழக்கு ஒன்றில் கையெழுத்திடுவதற்காக கமுதிக்கு சென்று திரும்பிய தொப்புளி முனியசாமியை மதுரையைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவரின் மகன் உள்ளிட்ட சிலர் காரில் கடத்தி உள்ளனர். கமுதி அருகில் உள்ள கோவிலாங்குளத்தில் வைத்துக் கொலை செய்து, எரித்ததாக தகவல் தெரிவித்துள்ளார்.
சுபாஷ் தெரிவித்த தகவலின் பேரில் 3 பேரை பிடித்துள்ளோம். தொடர் விசாரணைக்குப் பிறகு இவர்கள் கைது செய்யப்படுவர். மேலும் தொடர்புடையவர்களை தேடி வருகிறோம். பழிக்குப்பழியாக இக்கொலையை செய்திருப்பது தெரியவந்துள்ளது என்றனர்.