தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: அன்புமணி ராமதாஸ் குற்றசாட்டு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: அன்புமணி ராமதாஸ் குற்றசாட்டு
Updated on
1 min read

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதோடு நிர்வாகமும் முடங்கிவிட்டது; தமிழக ஆளுநர் உடனடியாக அமைச்சர்கள், அதிகாரிகளை அழைத்து அவர்களது கடமையை செய்ய அறிவுறுத்த வேண்டும் என பாமக மாநில இளைஞர் அணி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் பாமக நிர்வாகிகளுக்கு தனது இல்ல திருமண விழா அழைப்பிதழை கொடுப்பதற்காக அன்புமணி ராமதாஸ் நேற்று முன்தினம் இரவு வந்தார். கோவை ரயில்நிலையம் அருகே உள்ள தனியார் கூட்ட அரங்கில் கட்சி நிர்வாகிகளிடம் கலந்துரையாடல் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதோடு, நிர்வாகமும் முடங்கியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்ட போது எங்களது கட்சியினர் மீது காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்தனர். ஆனால், இப்போது அதிமுகவினர் பேருந்து எரிப்பு, அனுமதியின்றி போராட்டங்கள் நடத்துவது என சட்டம் ஒழுங்கு சீர்கெடும் வகையில் செயல்பட்டாலும் காவல்துறையினர் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

தமிழக அமைச்சர்களும் தங்களது பணியை செய்யாமல் போராட்டங்களில் ஈடுபடுவது, பெங்களூரில் தங்கி இருப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அமைச்சர் மற்றும் அதிகாரிகளை தமிழக ஆளுநர் அழைத்து கடமையை செய்ய அறிவுறுத்த வேண்டும்.

மீனவர் பிரச்சினை மற்றும் ஈழத் தமிழர் பிரச்சினைகளில் பாஜக அரசின் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை. தமிழக மக்களின் கோரிக்கையை நிராகரித்து விட்டு ராஜபக்சவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தது வருத்தம் அளிக்கிறது. பெண்கள் உடை விஷயத்தில் அவர்கள் மீது அடக்குமுறை கொண்டு வரக்கூடாது.

தனியார் பேருந்துகள் சங்கத்தினரை மிரட்டி அவர்களை வேலைநிறுத்தம் செய்ய அதிமுகவினர் நிர்பந்தித்துள்ளனர். இதேபோல், பல்வேறு சங்கங்களை மிரட்டி போராட்டம் நடத்துமாறு தூண்டி விடுகின்றனர். நீதிபதியையும், நீதிமன்றங்களையும் அதிமுகவினர் தரக்குறைவாக பேசிவருகின்றனர். இது தவறான போக்கு ஆகும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in