Last Updated : 21 Oct, 2014 08:50 AM

 

Published : 21 Oct 2014 08:50 AM
Last Updated : 21 Oct 2014 08:50 AM

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த ரியல் எஸ்டேட் கொலை, கடத்தல் பட்டியல்: டிஜிபி தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு களில் ரியல் எஸ்டேட் தொழில் விவகாரத்தில் நடைபெற்ற கொலை, கடத்தல் பட்டியலை தாக்கல் செய்ய தமிழக காவல்துறை இயக்குநருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை சின்னசொக்கிகுளத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஜமால் முகமது. இவர் கடந்த செப்டம் பர் 2-ம் தேதி கொடைக்கானலில் கொலை செய்யப்பட் டார். இந்த கொலை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா மற்றும் பழனிவேல், உமாராணி, பூங்கொடி, சங்கர், முகமதுசித்திக், கணேசன், மாரிமுத்து, சங்கர் உள்ளிட்ட வர்களை தல்லாகுளம் போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் ஜமால் முகமது கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி ஜமால்முகமது மனைவி ஜெய்னா பீவி உள்பட 8 பேர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் நீதிபதி என்.கிருபாகரன் நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில் கூறியிருப்பதாவது: ரியல்எஸ்டேட் தொழிலின் கொடூரமான முகத்தை இந்த வழக்கு காட்டுகி றது. கடந்த 10 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழிலில் என்ன நடக்கிறது என்பதற்கு இந்த வழக்கு ஒரு சாட்சியாக உள்ளது.

குற்றப் பின்னணி கொண்டவர் கள் பலர் அரசியலில் நுழைவதற்கும் இத்தொழில் ஒரு காரணமாக உள்ளது. ரியல் எஸ்டேட் தொழில் விவகாரத்தில் தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளில் பல்வேறு கொலை கள், கடத்தல்கள் நடந்திருப்பதும், இதில் பணபலம் மற்றும் அரசியல் பின்புலம் உள்ளவர்கள் சம்பந்தப்பட்டதும் தெரிகிறது. ரியல் எஸ்டேட் என்ற பெயரில் விவசாய நிலங்கள் பிளாட் போடப்பட்டது துரதிர்ஷ்டவசமானது.

எனவே, இந்த வழக்கில் தமிழகத் தில் ஒவ்வொரு மாவட்டங் களிலும் கடந்த 10 ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் தொழில் விவகாரம் தொடர்பான குற்றங்கள், கொலை கள், கடத்தல்கள் விவரங்களை ஆண்டு வாரியாக தாக்கல் செய்ய வேண்டும்.

ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் நில ஆக்கிரமிப்பில் தொடர்புடைய கும்பல் மற்றும் கட்டப் பஞ்சாயத்து கும்பல் விவரம், அதிகாரிகள் துணை யுடன் அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதா? நில அபகரிப்பு மற்றும் மோசடியைத் தடுக்க அரசு ஏன் இதுவரை வழிகாட்டுதல்களை வழங்கவில்லை?

ரியல் எஸ்டேட் தொழிலை முறைப் படுத்த என்னமாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என்பதற்கும் தமிழக உள்துறை செயலர், காவல்துறை இயக்குநர் மற்றும் புலனாய்வு பிரிவு ஐ.ஜி. ஆகியோர் அக். 27-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தர விட்டார்.

வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்

நீதிபதி தனது உத்தரவில், ஜமால் முகமது கொலை வழக்கை தல்லாகுளம் போலீஸார் பொறுப்பற்ற, நியாயமற்ற வகையில் விசாரித்துள்ளனர். இந்த வழக்கில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்டத் தலைவர் சித்திக் என்ற முகமது சித்திக், எஸ்டிபிஐ தெற்கு தொகுதியின் செயலர் அப்பாஸ் என்ற கரடி அப்பாஸ், நாம் தமிழர் கட்சி ஆனையூர் பொறுப்பாளர் மாரிமுத்து ஆகியோர் சம்பந்தப்பட்டுள்ளனர். இவர்கள் அரசியலில் இருப்பதால் போலீஸாரும் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர். எனவே இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுகிறது. 12 வாரத்தில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x