

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் மீண்டும் விளைநிலங்களுக்குள் நுழைந்த யானைகளால் வனத்துறையினர் நிம்மதி இழந்துள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களாக காட்டு யானைக்கூட்டம் ஓசூர் அருகிலுள்ள சானமாவு, உத்தனப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, போடூர், ஆலியாலம், பார்த்தக்கோட்டா உள்ளிட்ட கிராம விளைநிலங்களை துவம்சம் செய்கிறது. ஆரம்பம் முதலே இந்த யானைகளை விரட்ட வன ஊழியர்கள், பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றனர். யானைகளை ஆக்ரோஷப்படுத்துதல், உடலளவில் துன்புறுத்துதல், உயிருக்கு ஆபத்தை விளைவித்தல் போன்ற செயல்களை தவிர்த்து அவைகளின் போக்கை உணர்ந்து தான் யானைகளை விரட்ட வேண்டும்.
இதில் தவறு நடக்கும் பட்சத்தில் களத்தில் நிற்கும் வன ஊழியர்கள்தான் உயர் அதிகாரிகளுக்கு பதில் அளிக்க வேண்டும். எனவே தான் யானைகளின் போக்கிலேயே விட்டு அவைகளை காட்டுக்குள் விரட்டும் முயற்சிகளில் ஈடுபடுவர். இப்படி விதிகளை கடைபிடிக்கும்போது யானைகள் ஆற அமர விளைநிலங்களை சேதப்படுத்திக் கொண்டே இடம்பெயரும். அப்போது விவசாயிகளின் ஆத்திரம் முழுவதும் வன ஊழியர்கள் மீது பாய்கிறது. இதனால் தான் வனத்துறையினரின் வாகனங்களை சிறைபிடிப்பது, அதிகாரிகளை முற்றுகை இடுவது போன்ற காரியங்களில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.
ஒருபுறம், விதிகளை கடைபிடிக்காவிடில் அதிகாரிகளின் கண்டனம். மற்றொரு புறம், பயிர்கள் அழிவதால் விவசாயிகளின் கோபத்திற்கு ஆளாகி நிற்கும் நிலை. இப்படி இருபுறமும் விமர்சனங்களுக்கு ஆளாகும் ஓசூர் பகுதி வனப் பணியாளர்கள் நன்றாக உறங்கி மூன்று மாதம் ஆகிறதாம். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பிள்ளேகொத்தூர் ஏரி, குக்கலப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் 45 யானைகள் அடங்கிய கூட்டம் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. காட்டுக்குள் செல்வதும், மீண்டும் விளைநிலங்களில் நுழைவதுமாக பூச்சாண்டி காட்டும் காட்டு யானைகளால் வனத்துறையினர் கடுமையான மனம் மற்றும் உடற்சோர்வில் சிக்கி தவிக்கின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியது:
மூன்று மாதமாக இரவு, பகல் பாராமல் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளோம். யானைகள் மீது கோபப்பட முடியாது என்பதால் விவசாயிகள் எங்களிடம் சண்டைக்கு வருகின்றனர். அவர்களின் அதிருப்தியைக் கண்டு உயர் அதிகாரிகள் எங்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்கின்றனர். ஓசூர் பகுதியில் தற்போது கடும் பனிப்பொழிவு துவங்கி விட்டது. எனவே யானை விரட்டும் பணியில் உள்ள நடுத்தர வயதைக் கடந்த வன ஊழியர்கள் உடல்நிலை பாதிப்புக்கு ஆளாகின்றனர். இப்போது வெளியில் வந்திருக்கும் யானைக்கூட்டத்தை காட்டுக்குள் அனுப்புவதற்குள் இன்னும் என்னென்ன சிரமங்களை எதிர்கொள்ள இருக்கிறோமோ தெரியவில்லை, என்கின்றனர்.