

தமிழகத்தில் கோடையின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. வெப்பத்தின் அளவு இயல்பைவிட சற்று அதிகமாக இருந்து வருகிறது. தென் தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்கிறது. சென்னையில் நேற்று வெப்பத் தாக்குதல் இயல்பைவிட ஒருடிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.
இந்நிலையில், “வெப்பசலனம் காரணமாக இன்று உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யும். சூறைக்காற்றுடன்கூடிய இடிமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. கடலோரத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே இருக்கும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப் படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.