Published : 18 Jun 2017 10:32 AM
Last Updated : 18 Jun 2017 10:32 AM

முதுகலை பட்டதாரிகள் பிஎட் சேர குறைந்தபட்ச மதிப்பெண் தகுதி தேவையில்லை: இந்த ஆண்டு புதிய நடைமுறை அமல்

இளங்கலை பட்டதாரிகள் பிஎட் படிப்புக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் பெறவில்லை என்றா லும் முதுகலை படிப்பு படித்திருந்தால் அவர்கள் தாராளமாக பிஎட் படிப்பில் சேரலாம். இப்புதிய நடைமுறை இந்த ஆண்டிலி ருந்து அமல்படுத்தப்பட இருக் கிறது.

பிஎட் படிப்பில் சேர ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். (பொருளாதாரம், வணிகவியல், சமூகவியல், உளவியல் உள்ளிட்ட குறிப்பிட்ட பாடங்களுக்கு மட்டும் முதுகலை பட்டப் படிப்பு அவசியம்). பிஎட் மாணவர் சேர்க்கைக்கு பட்டப் படிப்பில் ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித் தனியே குறைந்தபட்ச மதிப்பெண் தகுதி நிர்ணயிக்கப்பட்டு இருக் கிறது. அதன்படி, பொதுப் பிரிவினர் எனில் 50 சதவீதமும், பிசி வகுப்பினர் எனில் 45 சதவீதமும், எம்பிசி பிரிவினர் என்றால் 43 சதவீதமும், எஸ்சி, எஸ்டி வகுப்பினர் எனில் 40 சதவீதமும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

இந்த நிலையில், இளங்கலை பட்டதாரிகள் பிஎட் படிப்புக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் பெறவில்லை என்ற போதிலும் அவர்கள் முதுகலை பட்டப் படிப்பு முடித்திருந்தால் அவர்களும் பிஎட் சேரும் வண்ணம் புதிய நடைமுறை 2017-18-ம் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதன்மூலம், தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், வரலாறு புவியியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் பிஎட் படிப்புக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச மதிப்பெண் பெற வில்லை என்றாலும் ஒருவேளை அவர்கள் அந்த பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருப்பின் அவர்கள் பிஎட் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பிஎட் மாணவர் சேர்க்கையின்போது குறைந்தபட்ச மதிப்பெண் தகுதி என்ற பிரச்சினை எழுவதில்லை. காரணம், நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச மதிப்பெண்ணைக் காட்டிலும் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கே கலந்தாய்வில் இடம் கிடைக்கும் நிலை உள்ளது. புதிய நடைமுறையால், தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில், மதிப்பெண் குறைவாக பெற் றவர்களும் பிஎட் படிப்பில் சேர முடியும் என்று கல்லூரி கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொறியியல் பட்டதாரிகள் இட ஒதுக்கீடு 10 சதவீதமாக குறைப்பு

கலை அறிவியல் பட்டதாரிகளைப் போன்று பொறியியல் பட்டதாரிகளும் பிஎட் படிப்பில் சேரும் முறை கடந்த 2015-16-ம் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது அவர்களுக்கு எந்த விதமான இட ஒதுக்கீடும் அளிக்கப்படவில்லை. அவர்கள் கணிதம், இயற்பியல் ஆகிய பாடப் பிரிவுகளில் பிஎட் படிப்பில் சேர அனுமதிக்கப்பட்டனர்.

2016-17-ம் கல்வி ஆண்டில் பொறியியல் பட்டதாரிகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் முறை கொண்டுவரப்பட்டது. அதன்படி, கணிதம், இயற்பியல் பாடப் பிரிவுகளில் வழங்கப்படும் பிஎட் இடங்களில் 20 சதவீத இடங்கள் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த சிறப்பு இட ஒதுக்கீடு காரணமாக தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என பிஎஸ்சி பட்டதாரிகள் அப்போது கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 20 சதவீத இட ஒதுக்கீட்டின்படி, அரசு மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக் பட்டதாரிகளுக்கு மொத்தம் 240 இடங்கள் ஒதுக்கப்பட்டன.

ஆனால், பிஎட் படிப்புக்கு பொறியியல் பட்டதாரிகள் மத்தியில் அவ்வளவாக வரவேற்பு இல்லை. பிஎட் படிப்பு காலம் 2 ஆண்டுகளாக இருப்பதே பொறியியல் பட்டதாரிகள் பிஎட் சேர ஆர்வம் காட்டாததற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்பட்டது.

இந்த நிலையில், 2017-18-ம் கல்வி ஆண்டுக்கான பிஎட் மாணவர் சேர்க்கை தொடர்பாக உயர் கல்வித்துறை செயலர் வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளில், பொறியியல் பட்டதாரிகளுக்கான இட ஒதுக்கீடு 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x