

வேலூர் மத்திய சிறையில் 22 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த மனநிலை பாதித்த ஆயுள் தண்டனை கைதி விஜயா விடுவிக்கப்பட்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டன பெற்ற நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை வக்கீல் புகழேந்தி அடிக்கடி சந்தித்துவருகிறார். இவ்வாறு நடந்த சந்திப்பின்போது பெண்கள் தனிச்சிறையில் கடந்த 21 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ள பக்கா என்ற விஜயா (57) என்பவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து,‘அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. எனவே, விஜயாவை விடுதலை செய்ய உதவவேண்டும்’ என சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் புகழேந்தி சார்பில் கடந்த 2011ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. தண்டனை காலம் முடிவதற்கு முன்பே விஜயாவை விடுதலை செய்ய வேண்டும் என்று அவர் அந்த வழக்கில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், பக்கா விஜயாவை விடுவிக்க தமிழக சிறைத்துறை கூடுதல் டிஜிபி திரிபாதி வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார். அதன்படி வியாழக்கிழமை மாலை விஜயா விடுதலை செய்யப்பட்டு அரியூர் அருகே உள்ள ஓ.ஆர்.டி பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.
இது தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,‘‘வழிபறி மற்றும் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பக்கா என்ற விஜயா, கடந்த 1991ம் ஆண்டு முதல் வேலூர் சிறையில் உள்ளார். நீண்ட நாள் சிறையில் இருந்த அவருக்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்டதால், அவர் சிறையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார். அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்ற வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.
விஜயாவின் தற்போதைய நிலையில், அவரை பாதுகாக்க உறவினர்கள் யாரும் முன்வரவில்லை. இதனால், காப்பகத்தில் ஒப்படைக்க சிறைத்துறை கூடுதல் டிஜிபி திரிபாதி அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில் விஜயாவை முன்கூட்டியே விடுதலை செய்து காப்பகத்தில் அனுமதித்துள்ளோம். பெண்கள் சிறையில் இருந்த காலத்தில் விஜயாவை சந்திக்க இதுவரை யாரும் வந்ததில்லை’’ என்றனர்.