Published : 20 Nov 2013 03:41 PM
Last Updated : 20 Nov 2013 03:41 PM

5 லட்சம் ஏழைகளுக்கு இலவச கொசுவலைத் திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் 5 லட்சம் பேருக்கு இலவச கொசுவலை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'சென்னை அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் போன்ற நீர்வழித் தடங்களின் கரைகள் அவைகளையட்டிய சாலையோரம் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு கொசுத்தொல்லையினைத் தவிர்க்கவும், கொசுக்களால் பரவும் நோய்களான மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கவும், ஐந்து லட்சம் எண்ணிக்கையிலான விலையில்லாக் கொசுவலைகள் வழங்கும் திட்டத்தின் முதற்கட்டமாக 1 கோடியே 32 லட்சத்து 13 ஆயிரத்து 96 ரூபாய் செலவில் 78,184 கொசு வலைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

முதல்வர் ஜெயலலிதா ஏழை எளிய மக்களுக்கு விலையில்லா கொசுவலைகள் வழங்கும் திட்டத்தைத் துவக்கி வைக்கும் அடையாளமாக 4 நபர்களுக்கு கொசுவலைகளை இன்று வழங்கினார்.

முதலமைச்சரின் 64-வது பிறந்த தினத்தை சென்னை மாநகரின் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு மற்றும் உலக வெப் பமயமாதல் தடுக்கும் நாளாக சென்னை மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டு கடந்த 24.2.2012 அன்று சென்னை மாநகரம் முழுவதும் மாணவ, மாணவியர் மூலம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அன்றைய தினமே சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் தலா 64 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு நாளாகக் கொண்டாடிட சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் 29.08.2013 அன்று சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் முதலமைச்சரின் பிறந்த தினத்தன்று சென்னை மாநகராட்சி மூல மாக சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு மற்றும் உலக வெப்ப மயமாதலைத் தடுப்பதற்கான பல்வேறு பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளன.

அதன்படி, பள்ளிக் குழந்தைகள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் வகையில் வைட்டமின் ஏ சத்து கொண்ட 6.5 லட்சம் பப்பாளி மரக்கன்றுகள் வழங்கும் திட்டம்; சென்னை மாநகரில் கொசுக்களைக் கட்டுப்படுத்திட பொதுமக்க ளுக்கு 5.5 லட்சம் மூலிகை குணம் கொண்ட நொச்சிச் செடி கன்றுகள் வழங்கும் திட்டம்; ஆகியவற்றைத் துவக்கி வைக்கும் அடையாளமாக 4 நபர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று பப்பாளி மரக்கன்றுகள் மற்றும் நொச்சிச் செடி கன்றுகளை வழங்கினார்.

சென்னையிலுள்ள படித்த ஏழை எளிய பட்டதாரி இளைஞர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் இதர போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று வேலை வாய்ப்பினைப் பெறுவதற்கு ஏதுவாக, சென்னை மாநகராட்சியால் முதற்கட்டமாக 710 ஏழை எளிய பட்டதாரி இளைஞர்களுக்கு கட்டணமில்லாமல் பயிற்சி அளிக்கும் வகையில் சைதாப்பேட்டையிலுள்ள சென்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மற்றும் பெரம்பூர் பந்தர் கார்டனிலுள்ள சென்னை மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் புதிதாக ஏற் படுத்தப்பட்டுள்ள இரண்டு பயிற்சி மையங்களை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்து, 4 நபர்களுக்கு சேர்க்கை கடிதங்களை வழங்கினார் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x