

அமர்நாத் யாத்திரைக்காக சென்று காஷ்மீரில் சிக்கியுள்ள 5 ஆயிரம் தமிழர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான புர்ஹான்வானி கடந்த 8-ம் தேதி பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் அங்கு காவல்துறையினருக்கு எதிராக கலவரம் நீடித்து வருகிறது. ஸ்ரீநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே அமர்நாத் யாத்திரைக்காக காஷ்மீர் சென்ற தமிழக பக்தர்கள் 5 ஆயிரம் பேர் அங்கு சிக்கித் தவித்து வருவதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. கலவரக்காரர்கள் பிடியில் இருந்து இவர்களை மீட்ட எல்லைப் பாதுகாப்புப் படையினர், பால்டால் பகுதி அருகே உள்ள முகாமில் தங்க வைத்துள்ளனர்.
அந்த முகாமில் உள்ள கரூரைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கலவரக் காரர்களிடமிருந்து தப்பித்து உள்ளூர் போலீஸ் உதவியை நாடியதாகவும், அவர்களும் பாதுகாப்பு அளித்து எல்லைப் பாதுகாப்புப் படை முகாமுக்கு அனுப்பி வைத்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.
முகாம்களில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதால், தண்ணீர், உணவு, மருந்துகளுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், பெண்கள், முதியவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவதிப்படுவதாகவும், தங்கள் அனைவரையும் மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தெரிவித்துள்ளார்.
ஆனால், இவர்களைப் பற்றி தமிழக அரசு கவலைப்பட்டதாக தெரியவில்லை. 5 ஆயிரம் தமிழர்களை மீட்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை. இனியாவது தமிழக அரசு விழித்துக் கொண்டு காஷ்மீரில் சிக்கியுள்ள 5 ஆயிரம் தமிழர்களை பாதுகாப்பாக மீட்டு அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பிட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.