Published : 11 Jan 2017 11:59 AM
Last Updated : 11 Jan 2017 11:59 AM

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு

பொங்கல் திருநாளையொட்டி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போனஸ் மற்றும் சிறப்பு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அரசுக்கு 325 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

1) 2015-2016 ஆம் ஆண்டிற்கு ‘சி’ மற்றும் ‘டி’ தொகுதியைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3,000 ரூபாய் என்ற உச்சவரம்பிற்குட்பட்டு 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையாக மிகை ஊதியம் வழங்கப்படும்.

2) ‘ஏ மற்றும் பி’ தொகுதியைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள், தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள், சிறப்புக் கால முறை ஊதியம் பெற்று வரும் சத்துணவுத் திட்டப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் சிறப்பு கால முறை ஊதிய விகிதத்தில் பணிபுரிந்து வரும் பஞ்சாயத்து உதவியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுபவர்கள் மற்றும் ஒரு பகுதி தினக் கூலிகளாக பணியாற்றி பின்னர் நிரந்தரப் பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு 1,000 ரூபாய் சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.

3) உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்கலைக் கழக மானியக் குழு / அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு / இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் கீழ் சம்பள விகிதம் பெறுபவர்கள், அனைத்திந்தியப் பணி விதிமுறைகளின் கீழ் சம்பளம் பெறுபவர்கள் ஆகியோருக்கும் இந்த மிகை / சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.

4) ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் (தலையாரி மற்றும் கர்ணம்) ஆகியோருக்கு 500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும்.

இதனால் அரசுக்கு 325 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x