

கன்னத்தைக் கிள்ளியதற்காக மாணவருக்கு ஆசிரியை ரூ.50 ஆயிரம் இழப்பீடாக வழங்கினார்.
சென்னை, மயிலாப்பூரில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவர் ஒருவரின் கன்னத்தை வகுப்பாசிரியை கிள்ளியதாகப் பிரச்சினை எழுந்தது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்தில் மாணவரின் தாயார் புகார் அளித்தார்.
இதனையடுத்து அந்த ஆசிரியை மீது பள்ளி நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டது. அந்த ஆசிரியை மன்னிப்புக் கடிதம் அளித்தார். இதற்கிடையே காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அந்த ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் மாநில மனித உரிமை ஆணையத்தில் மாணவரின் தாயார் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மனித உரிமை ஆணையம் பாதிக்கப்பட்ட மாணவருக்கு பள்ளி நிர்வாகம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
இந்த இழப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லை என்று கூறி மாணவரின் தாயார் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம். சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட அமர்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட மாணவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு தர ஆசிரியை தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது. எனவே இரு தரப்பினரும் பிரச்சினையை சுமுகமாக முடித்துக் கொள்ள முன்வந்தனர். இதனையடுத்து “ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலையை 6 வாரங்களுக்குள் ஆசிரியை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
“இரு தரப்புக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டதை அடுத்து சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக நிலுவையில் உள்ள குற்ற வழக்கை முடித்து வைக்கும்படி அந்த நீதிமன்றத்தை ஆசிரியை அணுகலாம். அந்த வழக்கை முடிப்பதற்கு மாணவரின் தாயாரும் உதவி செய்ய வேண்டும்” என்று கூறிய நீதிபதிகள் மனு மீதான விசாரணையை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.