Last Updated : 28 Jun, 2017 12:52 PM

 

Published : 28 Jun 2017 12:52 PM
Last Updated : 28 Jun 2017 12:52 PM

ஸ்ரீமுஷ்ணம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 3 மாணவர்களுக்கு இரண்டு ஆசிரியர்கள்: சேர்க்கையை அதிகரிக்க வேண்டுகோள்

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே மூன்று மாணவர்களுடன் இரண்டு ஆசிரியர்கள் பாடம் நடத்தும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்திட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள்.

ஸ்ரீமுஷ்ணம் அடுத்த தேத்தாம்பட்டு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி 1971ம் ஆண்டு அப்போதைய பொதுபணித்துறை அமைச்சராக இருந்த சாதிக் பாட்சாவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நல்ல முறையில் இயங்கி வந்த இப்பள்ளி தற்போது மாணவர்கள் எண்ணிக்கை குறைத்து மூன்று மாணவர்கள் மட்டுமே படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஒரு தலைமை ஆசிரியர், ஓர் உதவி ஆசிரியர் என இரண்டு ஆசிரியர்கள் மூன்று மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தருகின்றனர். பள்ளிக் கட்டிடம் பழுதடைந்ததால் அருகே உள்ள பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மைய கட்டிடத்தில் வகுப்புகள் நடந்தப்படுகின்றன. இந்த மூன்று மாணவர்களுக்கு என்று ஒரு சத்துணவு கூடமும், ஒரு சமையலரும் உள்ளார்.


தேத்தாம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்வி பயிலும் மூன்று மாணவர்கள்.

இந்த கிராமத்தில் ஆதி திராவிடர்கள் வசிக்கும் பகுதியில் ஓர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும், அருகில் உள்ள கிராமமான வெங்கிடுசமுத்திரம் பகுதியில் ஓர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும் அமைந்துள்ளது. இந்த இரு பள்ளிகளிலும் போதுமான அளவில் மாணவர்கள் உள்ளனர். இந்தப் பள்ளியில் கடந்த ஆண்டு முதல் இதே நிலை நீடிக்கிறது. மாணவர்கள் சேர்க்கை இல்லாத நிலையில் அரசு கிராமபுற பள்ளிகளை மூடி வருகிறது. இந்த நிலை கடந்த 45 வருடத்துக்கு மேல் இயங்கி வந்த இந்தப் பள்ளிக்கும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வியாளர்கள் கூறும்போது, ''தனியார் பள்ளிகளின் மோகத்தினால் கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள் கூட குழந்தைகளை தனியார் மெட்ரிக் பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர். இதனால் அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் நடத்தும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைத்து பள்ளி மூடும் நிலைக்கு தள்ளப்படுகிறது. மூடப்பட்ட பள்ளியை திறப்பது என்பது மிகவும் சிரமம். எனவே தேத்தாம்பட்டு பள்ளிக்கு அருகில் உள்ள பள்ளிகளில் இருந்து மாணவர்களை அனுப்பி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வகுப்புகளை நடத்த வேண்டும்.

கிராம மக்களும் அரசு பள்ளியில் படித்த பலர் உயர் பதவிகளுக்கு வந்துள்ளதை உணர்ந்து தங்கள் குழந்தைகளை இந்தப் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும். இதுபோல மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வரும் பள்ளிகள் குறித்து, அந்தந்த பகுதி மக்களிடையே மாவட்ட கல்வி அலுவலகம் போதிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் அவசியம்'' என்று கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x