கட்டாயப்படுத்தப்பட்டேன் என்று ஓபிஎஸ் கூறியிருப்பது வருத்தமளிக்கிறது: சரத்குமார்

கட்டாயப்படுத்தப்பட்டேன் என்று ஓபிஎஸ் கூறியிருப்பது வருத்தமளிக்கிறது: சரத்குமார்
Updated on
1 min read

ராஜினாமா செய்யுமாறு தான் கட்டாயப்படுத்தப்பட்டதாக ஓபிஎஸ் கூறியிருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இருவருக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசியல் சூழலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பது, "தமிழகத்தின் பேரியக்கம், இந்திய அரசியல் களத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் அஇஅதிமுகவின் தற்போதைய நிலை வேதனையளிக்கிறது.

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த பேரியிக்கம் பிளவு படாமல் இருப்பதற்கு எடுத்த நடவடிக்கைகளை எனது முந்தைய அறிக்கையில் பாராட்டி இருந்தேன். முக்கியமாக பன்னீர்செல்வம் அவர்களே முன்மொழிந்திருக்கிறார் எனவும் குறிப்பிட்டு இருந்தேன்.

தான் பொறுப்பேற்ற முதல்நாள் முதல் சிறப்பாக செயல்பட்ட பன்னீர்செல்வம் கட்டாயப்படுத்தப் பட்டேன் என்று கூறியிருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது அவரின் உண்மைக்கும் உழைப்பிற்கு மதிப்பளித்து அவரின் எண்ணங்களுக்கு வழிவகுத்து, ஒன்றுபட்டு ஜெயலலிதா மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீண்டும் சிறப்பான முறையில் நிறைவேற்றுவதற்கான அனைத்து செயல்களையும் உடனடியாக செய்யவேண்டும்" என்று தெரிவித்துள்ளார் சரத்குமார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in