

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற, டெசோ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மேலும், இலங்கையில் நடைபெற்று வரும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றதற்கு, திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான டெசோ அமைப்பு, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தது.
இலங்கை தமிழர்கள் ஆதரவு அமைப்பான 'டெசோ'வின் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான இக்கூட்டத்தில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இலங்கை தமிழர் பிரச்சினையில் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்ட இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 5 தீர்மாங்களில், 'காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதியும், டெசோ அமைப்பும் தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் மத்திய அரசை பலமுறை வலியுறுத்தியது. அதன் பிறகும், தமிழர்களின் ஒருமித்த உணர்வுகளை புறக்கணித்து விட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையில் ஒரு குழு இலங்கை சென்றது, வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போல் ஆகிவிட்டது.
இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்டது தமிழ் இனத்தை அழிக்க முயலும் ராஜபக்சேவுக்கு தோள் கொடுத்து தூக்கி நிறுத்தும் நடவடிக்கை என்று டெசோ கருதுகிறது.
இனியாவது மத்திய அரசு இலங்கை மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இலங்கை வடக்கு கிழக்கு மாகாண அரசுகளுக்கு அனைத்து அதிகாரமும் கிடைக்க வேண்டும்' என்று அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், தஞ்சையில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றச்சுவர் இடிக்கப்பட்டதற்காக, தமிழக அரசைக் கண்டித்தும் டெசோ அமைப்பின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.