Published : 14 Jul 2016 06:57 PM
Last Updated : 14 Jul 2016 06:57 PM

புதிய கல்விக் கொள்கை மீண்டும் குலக்கல்வி திட்டத்துக்கு உயிரூட்டுகிறது: வைகோ

8-ம் வகுப்பிலிருந்தே பள்ளிக் கல்வியை திறன் சார்ந்ததாக மாற்றுவதன் மூலம் புதிய கல்விக் கொள்கை மீண்டும் குலக்கல்வி திட்டத்துக்கு உயிரூட்டுகிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''புதிய கல்விக் கொள்கையை உருவாக்க மத்திய அமைச்சரவை முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை மத்திய பாஜக அரசு அமைத்தது. இந்தக் குழு தனது அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திடம் கடந்த மே மாதம் அளித்துள்ளது.

இந்த அறிக்கை தொடர்பாக ஜூலை 31-ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்குமாறு பொதுமக்கள், கல்வியாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையை உருவாக்கிய குழுவில் ஒருவர் கூட கல்வியாளர் இல்லை. குழுவின் தலைவர் உள்பட 5 பேரும் மத்திய அரசின் செயலாளர்களாக பணியாற்றியவர்கள். இக்குழுவின் உறுப்பினரான ஜே.எஸ்.ராஜ்புத் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்தவர் என்பதில் இருந்தே பாஜக அரசின் நோக்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது.

புதிய கல்விக் கொள்கை முழுக்க முழுக்க கல்வியை சந்தைப் பொருளாக்கி விற்பனை பண்டமாக மாற்றும் வகையில் உள்ளது. உலக வர்த்தக நிறுவனத்தின் சேவை வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

நாட்டின் விடுதலைக்குப் பிறகு கல்வி வளர்ச்சிக்காக அமைக்கப்பட்ட டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆணையம், கோத்தாரி ஆணையம், யஷ்பால் குழு அறிக்கை, ராஜீவ் காந்தி அரசு நடைமுறைப்படுத்திய கல்விக் கொள்கை, இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் ஆகியவற்றை டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம் குழு பரிசீலனைக்கே எடுத்துக் கொள்ளவில்லை.

பாடத் திட்டம், பயிற்றுவித்ததல் ஆகியவற்றை மையப்படுத்துதல், கல்வித் துறையில் மாநிலங்களின் அதிகாரத்தை முற்றிலும் பறித்தல், நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்து பல்கலைக்கழக மானியக் குழுவை கலைத்தல், பல்கலைக்கழக சிண்டிகேட், செனட் அதிகாரத்தை ரத்து செய்தல், கல்லூரிகளை பல்கலைக்கழகங்களில் இருந்து பிரித்து அவற்றை திறன்சார் சமூகக் கல்லூரிகளாக மாற்றுவது, வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுக்கான விதிமுறைகளை தாராளமயமாக்குதல், கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்ட பன்னாட்டு கல்வி நிறுவனங்கள் பட்டங்கள் வழங்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் உள்ளன.

8-ம் வகுப்பிலிருந்தே பள்ளிக் கல்வியை திறன் சார்ந்ததாக மாற்றுவதன் மூலம் மீண்டும் குலக்கல்வி திட்டத்துக்கு உயிரூட்டுகிறது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள கல்வி அடிப்படை உரிமையை பறிப்பது மட்டுமின்றி இட ஒதுக்கீட்டை நீர்த்துப் போகச் செய்தல், ஆய்வு என்ற பெயரில் சமஸ்கிருத திணிப்பை சட்டமாக்குதல் ஆகிய பேராபத்துக்கள் இதில் உள்ளன.

புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தினால் நாடாளுமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரம் பறிக்கப்படும். கல்வித் துறையின் இறையாண்மை பலி கொடுக்கப்படும் நிலை ஏற்படும். எனவே, புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு முற்றாக நிராகரிக்க வேண்டும். பிரதமர் மோடி இதனை வலியுறுத்த வேண்டும்'' என்று வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x