

நாளை நடைபெறும் லாரிகள் வேலைநிறுத்தத்தில் குடிநீர் லாரிகளும் பங்கேற்க திட்டமிட்டுள் ளதால் குடிநீர் தேவையை சமாளிக்க இன்றே கூடுதலாக 2 ஆயிரம் நடைகள் குடிநீர் விநியோகிக்க சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னையில் பருவமழை பொய்த்ததால் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் அனைத்தும் வறண்டு வருகின்றன. இதனால் சென்னை மாநகருக்கான குடிநீர் விநியோகம் நாள் ஒன்றுக்கு 850 மில்லியன் லிட்டரிலிருந்து 550 மில்லியன் லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த கோடையை சமாளிக்க சென்னை குடிநீர் வாரியமானது விவசாய கிணறுகள், கல் குவாரிகள் உள்ளிட்ட பல்வேறு புதிய நீர் ஆதாரங்களை தேடி வருகிறது. தற்போது குழாய்கள் மூலமாக குடிநீர் விநியோகம் குறைக்கப்பட்டு லாரிகள் மூலமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி 520 லாரிகள் மூலமாக தினந்தோறும் 5 ஆயிரத்து 500 நடைகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் மீதான தமிழக அரசின் வாட் வரி உயர்வு, வாகன காப்பீடு கட்டணம் 50 சதவீதம் உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து 30-ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடபோவதாக லாரி உரிமை யாளர் சங்கத்தினர் அறிவித்திருந் தனர். சென்னை குடிநீர் வாரியத் துக்காக குடிநீர் விநியோகம் செய்யும் லாரி உரிமையாளர்களும் 30-ம் தேதி அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதை ஏற்று குடிநீர் லாரிகளும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுகிறது.
இதற்கிடையில் தற்போது நிலவும் குடிநீர் தேவையை கருத்தில்கொண்டு குடிநீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண் டாம் என சென்னை குடிநீர் வாரியம், குடிநீர் லாரி உரிமையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது.
குடிநீர் லாரிகள் கட்டாயம் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதால் நிலைமையை சமாளிக்க, இன்று (புதன்கிழமை) கூடுதல் நடைகளை இயக்க குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, வழக்கமான 5 ஆயிரத்து 500 நடைகளுடன் கூடுதலாக 2 ஆயிரம் நடைகளை இயக்கி குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.
வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை
லாரி உரிமையாளர் வேலைநிறுத்தம் தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய டேங்கர் லாரி ஒப்பந்ததாரர்கள் சங்கப் பொதுச்செயலர் என்.இளங்கோவிடம் கேட்டபோது, ‘லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு வேலைநிறுத்தில் பங்கேற்க அழைப்புவிடுத்து இருந்தது. சென்னையில் தற்போது வறட்சி நிலவுவதால் குடிநீர் தேவையின் அவசியம் கருதி வேலைநிறுத்தத்தில் பங்கேற்க மாட்டோம். ஆனால், வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என அந்தக் கூட்டமைப்புக்கு தெரிவித்துள்ளோம். லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்காவிட்டால் போராட்டத்தில் பங்கேற்பது குறித்து விரைவில் முடிவு எடுப்போம்’ என்றார்.
சென்னை தனியார் குடிநீர் லாரி உரிமையாளர் சங்கத்தினரும் அதே முடிவை எடுத்திருப்பதாக அந்தச் சங்கத்தின் பொருளாளர் எஸ்.முருகன் தெரிவித்தார்.