

வங்கக் கடல் பகுதியில் உருவான லெஹர் புயல், அந்தமான் நிகோபர் தலைநகர் போர்ட் பிளேரில் ஞாயிறுக்கிழமை இரவு கரையை கடக்கும். சென்னைக்கு ஆபத்து இல்லை.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:
கடந்த 23 ஆம் தேதியன்று கிழக்கு அந்தமான் கடற்கரை பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையானது ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு 'லெஹர்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் போர்ட்பிளேர் நகரை கடக்கும். அப்போது சுமார் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இது பின்னர் படிப்படியாக வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகர்வதால் சென்னைக்கு வடக்கே ஆந்திர மாநிலத்தின் மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டணம் இடையே 28 ஆம் தேதி கரையை கடக்கும்.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): விருதுநகர் மாவட்டம் சதுரகிரி 15, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் 14, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி 10, விருதுநகர் மாவட்டம் சிவகாசி 9, திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் 8, தேனி மாவட்டம் உத்தமபாளையம், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் 7, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, விருதுநகர் மாவட்டம் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, கடலூர் மாவட்டம் சிதம்பரம் 6 செ.மீ.
லெஹர் புயலால் அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழகத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும். சென்னையை பொறுத்த வரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வங்க கடல் பகுதியில் பலமான கடல் காற்று வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுபள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.