

முறைகேடாக இயங்கும் சாய ஆலையால் குடிநீர் நஞ்சாகிவிட்டதாக, கரைப்புதூர் கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், ஆட்சியர் ச.ஜெயந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. கரைப்புதூர் கிராம விவசாயிகள் கூறியதாவது:
திருப்பூர் அருகே அருள்புரம் கரைப்புதூர் கிராமத் தில் சுமார் 500 குடும்பத்தினர் வசிக் கின்றனர். எங்கள் பகுதியில் அமைந்துள்ள தனியார் சாய ஆலையில், சுத்திகரிக்கப்படாமல் தினமும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. குடிநீர் கடுமையாக மாசுபட்டு, பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உப்புத்தன்மை அதிக அளவில் இருப்பதால், குடிநீர் மஞ்சள் நிறத்தில் உள்ளது. அதை கால்நடைகளுக்கும் பயன்படுத்த முடியாது. குடிநீர் நஞ்சாகிவிட்டது. அந்த நீரில் குளித்தால் தோல் நோய் ஏற்படுகிறது. இதுவரை 10 முறை சீல் வைக்கப்பட்டு, இந்த சாய ஆலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
முறைகேடாக இரவு நேரங்களில் சாயக் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் சோதனையின்போது மட்டும், முறையாக பராமரிப்பதுபோல் நிறுவனம் காட்டிக்கொள்கிறது. இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாட்டிலில் பிடித்து வைத்திருந்த மஞ்சள் நிற குடிநீரை காட்டினர்.
வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி:
தனியார் சாய ஆலை கழிவுநீரை இரவு நேரத்தில் அதிக அளவில் வெளியேற்றினால், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சீல் வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சின்னச்சாமி:
பெருமாநல்லூர் பகுதி விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி, மின் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கெங்கவள்ளி, கணபதிபாளையம் பகுதியில் விவசாயிகளிடம் வருவாய்த் துறை அதிகாரிகள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தினர். அப்போது, விவசாயிகள் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், ஒப்புக்கொண்டதாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் அளித்துள்ளனர். இதுதொடர்பாக ஆட்சியர் விசாரிக்க வேண்டும்.
எஸ்.ஆர்.மதுசூதனன்:
உடுமலை அருகே பாலாற்றில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளன. ஆற்றின் நடுவே தென்னைமரம் நடப்பட்டு விவசாயம் செய்யப்படுகிறது. குடிநீருக்காக விடப்படும் நீரையும் உறிஞ்சுகின்றனர். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணி நேரத்தை முறைப்படுத்த வேண்டும்.
கோபால்:
தமிழகம் முழுவதும் பால் தேவையில் 25 சதவீதம் தான் ஆவின் வழங்குகிறது. மீதமுள்ள 75 சதவீதம் தனியார் நிறுவனங்களே வழங்குகின்றன. சமீபத்தில், பால் விலையை தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தின. ஆனால், விவசாயிகளுக்கான கொள்முதல் விலை ரூ. 22 மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே, கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.
காளிமுத்து:
தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் குடிநீருக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும்.
ஆட்சியர் ச.ஜெயந்தி பேசும்போது, “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டப் பணியை, காலை 7 மணிக்கு தொடங்க வேண்டும் என்பது உத்தரவல்ல. சம்பந்தப்பட்ட பகுதியில் நிலவும் வெயிலின் சூழலை பொறுத்து, வட்ட வளர்ச்சி அலுவலர்கள் மாற்றிக் கொள்ளலாம்” என்றார்.