சொத்துக் குவிப்பு வழக்கு: ‘சிவன் மலை முருகன் முன்கூட்டியே வழங்கிய தீர்ப்பு’ - சமூக வலைதளங்களில் பரவும் வைரல்

சொத்துக் குவிப்பு வழக்கு: ‘சிவன் மலை முருகன் முன்கூட்டியே வழங்கிய தீர்ப்பு’ - சமூக வலைதளங்களில் பரவும் வைரல்
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையில் சுப்பிரமணியசுவாமி மலைக் கோயில் உள்ளது. மற்ற எந்தக் கோயிலிலும் இல்லாத சிறப்பு அம்சமாக, சிவன்மலை முருகன் கோயிலில் ‘ஆண்டவன் உத்தரவு’ என்ற பெயரில், ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்யப்படுவது வழக்கம்.

பின்னர் அந்தப் பொருளை கோயில் மூலவர் அறைக்கு முன்பாக உள்ள கற்தூணில் உள்ள கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்து பக்தர்களின் பார்வைக்கு வைப்பார்கள்.

இந்தக் கண்ணாடி பெட்டிக்குள் என்ன பொருளை வைக்க வேண் டும் என்ற தேர்வு முறை சற்று வித்தி யாசமானது. சிவன்மலை முருகன் ஏதாவது ஒரு பக்தரின் கனவில் வந்து, இன்ன பொருளை வைத்து பூஜை செய்ய உத்தரவிடுவதாகக் கூறப்படுகிறது. இதனால் தான், இது ஆண்டவன் உத்தரவு என்று அழைக்கப்படுகிறது.

இப்படி, கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் என்று எதுவும் இல்லாமல், இன்னொரு பக்தரின் கனவில் வந்து, அடுத்த பொருளை சுட்டிக் காட்டும் வரையில், பழைய பொருளே கண்ணாடிப் பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு, கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள், தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் என்பது இப்பகுதிகளில் உள்ள பக்தர்களின் நம்பிக்கை.

கடந்த ஆண்டு ஆக.29-ம் தேதி பூமாலை வைத்துப் பூஜை செய்யப்பட்டு, அது கண்ணாடிப் பெட்டிக்குள் கடந்த ஜனவரி 9-ம் தேதி வரை வைக்கப்பட்டிருந்தது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள கொங்கூர் பகுதியைச் சேர்ந்த கே.எம்.சிவராம் என்ற பக்தரின் கனவில் வந்ததாக, ஜன.10-ம் தேதி இரும்புச் சங்கிலி வைத்து சிறப்புப் பூஜை செய்யப்பட்டது. இதன் மூலம் சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடையவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என அப்போது பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நேற்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானவுடன் சமூக வலைதளங்களில் சிவன்மலையில் மேற்கொள்ளப்பட்ட வழிபாட்டை மேற்கோள் காட்டியும், இது ஆண்டவன் முன்பே கணித்த தீர்ப்பு என்ற வகையிலும் வைரலாக பரவியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in