

பிரச்சாரத்தின்போது தன்னை தாக்கியதாக ஓபிஎஸ் ஆதரவாளர் அளித்த புகாரின் பேரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புது வண்ணாரப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை ஆர்.கே நகரில் தேர்தல் பிரச்சாரம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு மகளிர் பிரிவினர் பிரச்சாரம் செய்தனர். அதே நேரத்தில், அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் தொண்டர்கள் வாக்கு சேகரித்தனர்.
அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அது கைகலப்பாக மாறியது. அப்போது, ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த உமையாள் என்ற பெண் தொண்டரை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் உமையாள் புகார் அளித்தார். புகாரின் பேரில் ராஜேந்திர பாலாஜி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.