அவசரச் சட்டம் பிறப்பிக்காவிட்டால் 26-ம் தேதி பாமக சார்பில் தடையை மீறி ஜல்லிக்கட்டு: அன்புமணி

அவசரச் சட்டம் பிறப்பிக்காவிட்டால் 26-ம் தேதி பாமக சார்பில் தடையை மீறி ஜல்லிக்கட்டு: அன்புமணி
Updated on
3 min read

அடுத்த இரு நாட்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி அளிக்க மறுத்தால் வரும் 26-ஆம் தேதி அன்று பாமக சார்பில் தடையை மீறி ஜல்லிக்கட்டு அமைதியாக நடத்தப்படும் என்று அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக எது நடக்க வேண்டும் என்று நினைத்தோமோ, அது இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆட்சியாளர்களின் செயல்படாத தன்மைக்கு எதிராக இளைஞர்களும், மாணவர்களும் லட்சக்கணக்கில் குவிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தன்னெழுச்சியாக குவிந்து மாணவர்களும், இளைஞர்களும் நடத்தி வரும் போராட்டம் வெல்ல வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் கடந்த 5000 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை, இந்திய நலனுக்கு எதிராக செயல்படும் பீட்டா என்ற அமைப்பு முன்வைத்த வாதங்களின் அடிப்படையில் தடை செய்ததையோ, அந்த தடையை நீக்க மத்திய, மாநில அரசுகள் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காததையோ ஏற்றுக் கொள்ள முடியாது.

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறிவந்த மத்திய, மாநில அரசுகள் கடைசி நேரத்தில் நம்பிக்கை துரோகம் செய்ததைக் கண்டித்துதான், தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தன்னெழுச்சியான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தமிழகத்தில் 1965-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகு கடந்த 50 ஆண்டுகளில் இப்படி ஒரு தன்னெழுச்சியான போராட்டத்தை இப்போது தான் காண முடிகிறது. போராட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் பெருமளவில் கலந்து கொண்டிருப்பது தமிழர்களின் போராட்ட குணத்தைக் காட்டுகிறது.

தமிழக இளைஞர்களின் மொழி உணர்வைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகள், மாணவர்களின் போராட்டக் குணத்தை மழுங்கடிக்கும் முயற்சிகளில் தான் கடந்த 50 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தன. மதுவை வெள்ளமாகப் பாயவிட்டும், திரைப்படங்களுக்கு அடிமையாக்கியும் இளைய தலைமுறையினரை சீரழிக்கும் முயற்சிகளை ஆட்சியாளர்கள் செய்தனர்.

தமிழக இளைஞர்கள் பன்னாட்டு கலாச்சாரத்திற்கும், மதுவுக்கும் அடிமையானவர்கள்; அவர்களிடம் போராட்டக் குணம் வற்றிப் போய்விட்டது என்ற எண்ணம் மெல்ல மெல்ல தலைதூக்கிய நிலையில், தமிழக இளைஞர்களின் போராட்டக் குணம் ஒரு போதும் குறையாது, சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை நிரூபிக்கும் வகையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர் சக்தி வெகுண்டு எழுந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

ஜல்லிக்கட்டுக்குத் தடை என்ற ஒற்றை பண்பாட்டு அழிப்பு முயற்சிக்காக மட்டும் தமிழக இளைஞர்கள் போராடவில்லை. ஈழத் தமிழர் படுகொலையை தடுக்கத் தவறியது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பது, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சியையும், பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டும் கேரளத்தின் முயற்சிகளையும், பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டும் ஆந்திரத்தின் சதியையும் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது ஆகியவற்றுக்கும் உரிமைக்குரல் எழுப்பியுள்ளனர்.

மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்க்க நடவடிக்கை எடுக்காதது, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்காதது, வார்தா புயலுக்கு நிவாரணம் வழங்காதது, தமிழக மாணவர்கள் மீது நீட் எனப்படும் மருத்துவ நுழைவுத் தேர்வையும், சமஸ்கிருத மொழியையும் வலிந்து திணிப்பது என தமிழகத்திற்கு மத்திய ஆட்சியாளர்கள் தொடர்ந்து செய்து வந்த துரோகத்தையும், அதை தடுக்கத் தவறிய தமிழக அரசையும் கண்டித்தும் தான் மாணவர்கள் உரிமைக் கலகம் மேற்கொண்டிருக்கிறனர்.

தமிழகத்தில் கடந்த இரு மாதங்களாக நடைபெற்று வரும் அநாகரீக அரசியல் மாற்றங்களை சகிக்க முடியாததும் போராட்டத்திற்கு காரணமாகும். மாணவர்களின் இந்த போராட்டம் மதிக்கத்தக்கது; பாராட்டத்தக்கது.

அண்மைக் காலங்களில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு சிறந்த உதாரணங்கள் சீனாவின் தியானன்மென் சதுக்கப் போராட்டம், அரேபிய நாடுகளில் நடைபெற்ற அரேபிய வசந்தம், ஹைதராபாத்தில் நடந்த தெலங்கானா தனிமாநிலப் போராட்டங்கள், டெல்லியில் அன்னா ஹசாரே தலைமையில் நடைபெற்ற ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் ஆகியவை தான்.

1989-ஆம் ஆண்டில் தியானன்மென் சதுக்கப் போராட்டம் பெய்ஜிங் நகரை மையமாகக் கொண்டு மொத்தம் 400 நகரங்களில் நடைபெற்றது. அரேபிய வசந்தம் என்ற பெயரிலான மக்கள் எழுச்சி 2010 ஆம் ஆண்டு துனிசியாவில் தொடங்கி எகிப்து, லிபியா, சிரியா, பஹ்ரைன், ஏமன் என பலநாடுகளுக்கு பரவியது. தெலங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்கள் நடத்திய போராட்டம் ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக் கழகத்தை மையமாக வைத்து தெலங்கானா முழுவதும் நடைபெற்றன.

அதேபோன்று. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாணவர்கள் போராட்டம் சென்னை மெரினா கடற்கரையை மையமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் 200 இடங்களிலும், தமிழர்கள் அதிகம் வாழும் 30-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலும் நடைபெற்று வருகின்றன. முந்தைய போராட்டங்கள் எப்படி வெற்றி பெற்றனவோ, அதேபோல் இந்த போராட்டமும் மிகப்பெரிய வெற்றி பெறும்; மாணவர்கள் வரலாறு படைப்பார்கள் என்பது உறுதியாகும்.

ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் பிற கட்சித் தலைவர்களை சந்திப்பதற்காக நான் புதுதில்லி வந்திருந்தாலும் என் மனம் முழுவதும் மாணவர்கள் நடத்தும் போராட்டத்தின் மீது தான் உள்ளது.

பாமகவின் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அமைப்பை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடக்கும் போராட்டங்களில் பங்கேற்றுள்ளனர். மாணவர்களின் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவிக்க மனது துடிக்கிறது. ஆனால், அரசியல் கட்சியினர் தங்கள் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்றும், அவ்வாறு பங்கேற்கச் சென்ற தலைவர்களை திருப்பி அனுப்பியதாலும் என் மனதை கட்டுப்படுத்திக் கொண்டு தார்மீக ஆதரவையும், பாராட்டுகளையும் வழங்கி வருகிறேன்.

மக்கள் பிரச்சினைக்காக மாணவர்கள் போராட வேண்டும் என்பது தான் பாமகவின் நீண்ட நாள் விருப்பம். இதைத் தான் பாமக நிறுவனர் ராமதாஸும், நானும் கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். பாமக எதிர்பார்த்த மாற்றம் இப்போது ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு தேவையான மற்ற விஷயங்கள் இனி தானாக நடக்கும்.

மாணவர்களின் தன்னெழுச்சியான இப்போராட்டத்தை மதித்து தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வசதியாக மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும். அடுத்த இரு நாட்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி அளிக்க மறுத்தால் வரும் 26-ஆம் தேதி குடியரசு நாள் அன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாமக சார்பில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு ஆகிய போட்டிகள் தடையை மீறி அமைதியாக நடத்தப்படும். இப்போட்டிகளில் மாணவர்களும், இளைஞர்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in