Published : 09 Oct 2014 09:06 AM
Last Updated : 09 Oct 2014 10:22 AM
பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹாவை அவதூறு செய்யும் வகையில் போஸ்டர்கள், பேனர்கள் வைக்கப்பட்ட விவகாரத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கு தண்டனை வழங்கி கடந்த 27-ம் தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப் பளித்தது. இதையடுத்து தமிழ கத்தின் பல பகுதிகளில் அதிமுக வினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
போராட்டங்களால் பொதுமக் கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு அரசுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.பாரதி, வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவைத் தலைவர் கே.பாலு, மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் செயலாளர் எஸ்.ஜிம்ராஜ் மில்டன், சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி ஆகியோர் தாக்கல் செய்த மனுக் கள் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்திய நாரா யணன் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.வைகை, ‘‘சொத்துக் குவிப்பு வழக் கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை மேல்முறையீடு செய்ய சட்டத்தில் இடமுள்ளது. இந்நிலையில், தீர்ப்பு அளித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதியை அவதூறு செய்யும் வகையில் தமிழகத்தில் பல போராட்டங்கள் நடக்கின்றன. உயர் நீதிமன்றத்தின் அருகிலும், காவல் நிலையங்களுக்கு அருகிலும்கூட அவதூறான கருத்துகளை தாங்கிய போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. ஆனால், இது தொடர்பாக காவல் துறையினர் எவ்வித நடவடிக் கையும் எடுக்கவில்லை. நீதித் துறையை அவமதிப்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என்று வாதிட்டார்.
மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் வாதிடும்போது, ‘‘பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதியை கண்டிக்கும் வகையில் வேலூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீதிபதிக்கு எதிராக இவ்வாறு தீர்மானம் இயற்றக் கூடாது’’ என தெரிவித்தார். நீதித்துறையை அச்சுறுத்தும் வகையில் போராட் டங்கள் நடப்பதாக வழக்கறிஞர் ஜி.எத்திராஜூலு குறிப்பிட்டார்.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக் கறிஞர் ஏ.எல்.சோமையாஜி, தற்போதைய நிலவரம் தொடர் பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், ‘‘செப்டம்பர் 27-ம் தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு வெளியான பிறகு, அதிமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். எனினும் காவல் துறையினர் உடனடியாக செயல்பட்டு சட்டம் - ஒழுங்கு பாதிக்காத வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பஸ் போக்கு வரத்து உட்பட மக்களுக்கான அத்தியாவசிய சேவைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. ஆங்காங்கு நடந்த உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் அமைதியான முறையில் நடை பெற்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. மொத்தத்தில் தமிழகத்தில் அமைதியான சூழல் நிலவுகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது.
அனைத்து தரப்பு வாதங்க ளையும் கேட்ட பின், நீதிபதி கள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ள தாவது:
பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதியை அவதூறு செய்யும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட தாகவும், பேனர்கள் வைக்கப் பட்டதாகவும் கூறப்படுவது பற்றியும், இதுதொடர்பாக அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும், இந்த வழக்கில் வேலூர் மாநகராட்சியையும் ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும். சிறப்பு நீதிமன்ற நீதிபதியை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படுவது பற்றி வேலூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் விசாரணை நவம்பர் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட் டுள்ளது.