Published : 18 Apr 2017 12:31 PM
Last Updated : 18 Apr 2017 12:31 PM

தமிழகத்தில் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது வேதனைக்குரியது: ஸ்டாலின்

அரசியல் சட்டப்படி கடமையாற்ற வேண்டிய அமைச்சர்களும், முதலமைச்சரும் தங்கள் கடமையை மறந்து "உள்கட்சி" பிரச்சினையில் உறைந்து போயிருக்கிறார்கள். தமிழகத்தில் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது வேதனையளிக்கிறது என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போராட்டங்கள் வெடித்துக் கொண்டு இருக்கின்றன. மக்களும், மாணவர்களும், தாய்மார்களும் தன்னெழுச்சியாக மதுக்கடைகளை மூடக்கோரி போராட்டம், குடிநீர் வழங்கக்கோரி போராட்டம், தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் குடும்பங்களை காப்பாற்றக்கோரி போராட்டம் என்று தமிழகமே "போராட்டக் களமாக" மாறி வருகிறது.

மாணவர்களும், மக்களும் இணைந்து நடத்தும் போராட்டங்கள் தமிழகத்தில் மக்கள் குறைகளை காது கொடுத்துக் கேட்கும் ஜனநாயகரீதியிலான அரசு இல்லை என்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லியில் 36 நாட்களாகப் போராடி வரும் விவசாயிகளை சென்று சந்திக்க மறுக்கும் முதலமைச்சரை தமிழகம் பெற்றிருக்கிறது என்பது உள்ளபடியே வேதனையாக இருக்கிறது.

இதுவரை மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒர் ஆட்சியின் அமைச்சர்கள் கூட்டம் நடக்கும். அதிகாரிகளை அழைத்துப் பேசுவார்கள். ஆனால் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆட்சியில் தங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகள், அதிகாரப்போட்டிகள், ஆட்சிக்கு தலைமையை மாற்றுவதா, கட்சிக்கு தலைமையை மாற்றுவதா என்பது குறித்து விவாதித்துக்கொள்ள மட்டுமே அமைச்சர்கள் கூடிப் பேசுகிறார்கள். அதுவும் இரவில் கூடுகிறார்கள். பேசிக்கலைகிறார்கள்.

"இரட்டை இலை சின்னத்திற்கு 60 கோடி பேரம்" என செய்தி வந்தவுடன் அமைச்சர்கள் "இரு பிரிவுகளாக" தனித்தனியாக கூடிப் பேசுகிறார்கள். முதலமைச்சரே கூட பாராளுமன்ற துணை சபாநாயகரை தலைமைச் செயலகத்திற்கே அழைத்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

போராடும் மக்களை சந்தித்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமைச்சர்களும் முன் வருவதில்லை. ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் விரும்புவதில்லை. குடிநீர் கேட்டு, கல்வி அமைச்சர் செங்கோட்டையனையே மறித்து மக்கள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது. முதலமைச்சரின் தொகுதியிலேயே அடிப்படை வசதிகளுக்காக போராட்டம் நடக்கிறது.

“தமிழகத்திற்கு நீட் தேர்வு கட்டாயம் உண்டு” என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சரே அறிவித்த பிறகும் முதலமைச்சர் இதுவரை வாய் திறக்கவில்லை. "தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சட்ட தகுதி வழங்கி, பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் தயாரிக்கும் அதிகாரத்தை மத்திய அரசே எடுத்துக் கொள்வது" பற்றி சமூகநீதியின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் தமிழகத்தை ஆளும் முதலமைச்சரிடமிருந்து இதுவரை ஒரு அறிக்கை இல்லை.

முதலமைச்சரை பொறுத்தமட்டில் அந்தப் பதவியில் நீடிப்பதே போராட்டமாக இருக்கிறது. இந்தப் போராட்டத்தில் யார் பக்கம் நிற்பது என்ற மனப்போராட்டத்தில் அமைச்சர்கள் அங்கும் இங்குமாக அலைமோதிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பிரச்சினைகளுக்காக போராடும் மக்களிடம் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள போலீஸ் அதிகாரிகளும் அதற்குத் தயாராக இல்லை.

ஆங்காங்கு உள்ள அரசு அதிகாரிகளும் முனைப்பு காட்டுவதில்லை. தமிழக நலன்கள் பற்றியும் யாருக்கும் அக்கறை இல்லை. யாருக்கு என்ன நிகழ்ந்தால் நமக்கு என்ன என்ற போக்கிலேயே இன்றைய அதிமுக அரசின் நிர்வாகம் செயலிழந்து திசைமாறி திக்குத்தெரியாத காட்டிற்குள் நுழைந்து விட்டது. இனி அது திரும்ப வருமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. முற்றிலும் செயலிழந்து விட்ட அரசால் இன்று மாநில அரசு நிர்வாகம் சீர்குலைந்து விட்டது. அரசியல் சட்டப்படி கடமையாற்ற வேண்டிய அமைச்சர்களும், முதலமைச்சரும் தங்கள் கடமையை மறந்து "உள்கட்சி" பிரச்சினையில் உறைந்து போயிருக்கிறார்கள்.

சென்னை மாநகரமே குடிநீர் பிரச்சினையில் தவித்துக் கொண்டிருக்கும் இந்தவேளையில், குறைந்தபட்சம் ஆந்திர முதலமைச்சரை சந்தித்து குடிநீர் பெறுவதற்கு கூட முதலமைச்சருக்கு நேரமில்லை.

மாநில அரசின் 2017-18 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை மார்ச் 16 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு ஒரு மாதம் கழித்தும் இன்னும் துறைவாரியான மான்யக் கோரிக்கைகள் பற்றி விவாதிக்க சட்டமன்றக் கூட்டம் கூட்டப்படவில்லை. துறைரீதியாக திட்டங்களுக்கு சட்டமன்றத்தின் ஒப்புதல் பெறப்படவில்லை. நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள ஒரு சில திட்டங்களையும் எப்படி நிறைவேற்றப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. நிர்வாகம் மட்டும் அல்ல- நிதி நிலை அறிக்கையும் இப்போது முடங்கிக் கிடக்கிறது.

அதிமுக ஆட்சியில் சட்டமன்ற ஜனநாயகம் இல்லை என்பது ஒரு புறமிருக்க, இன்றைக்கு முதலமைச்சரும் இல்லை. அமைச்சரும் இல்லையோ என்பது போன்ற தேக்கநிலைமை நிர்வாகத்தில் புரையோடிப் போய்விட்டது மிகவும் ஆபத்தானது. அரசியல் சட்டப்படி இந்த அரசு நிர்வாகம் செயல்படுகிறதா என்ற மிகப்பெரிய சந்தேகமே இப்போது உருவாகியிருக்கிறது. இதனால் மாநிலத்தின் தொழில் வளர்ச்சி பின்னுக்குத் தள்ளப்பட்டு, பொருளாதார வளர்ச்சி மறைந்து வீழ்ச்சியை சந்தித்து, மாநில முன்னேற்றம் அனைத்துவகையிலும் பாதிக்கப்பட்டு நிற்கிறது.

இப்படியொரு அரசு நீண்ட நாள் நீடிப்பது தமிழக நலனுக்கோ, மக்களுக்கோ ஏன் நாட்டு நலனுக்கோ துளியும் உடன்பாடானது அல்ல. ஆகவே மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக தலையிட்டு மான்யக் கோரிக்கை விவாதத்திற்கு சட்டமன்ற கூட்டத்தொடரை கூட்ட உத்தரவிட வேண்டும் என்றும், முடங்கிக் கிடக்கும் மாநில அரசு நிர்வாகத்தை செயல்பட வைத்து, மாநில நலனையும் - மக்கள் நலனையும் பாதுகாக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x