

வி.ஆர்.எஸ் எனப்படும் விருப்ப ஓய்வில் (?) வெளியே வந்த பணியாளர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. வயது, கல்வி, பணி அனுபவம் என சகலமும் வேறுபட்ட சுமார் நூறு பேரைச் சந்தித்தேன். பலர் அதே நிறுவனத்தில் தன் மொத்த வாழ்க்கையையும் வாழ்ந்தவர்கள். இளைஞனாக யூனிஃபார்ம் போட்டவர்கள் இன்று பேரக்குழந்தை எடுத்து பின் அதை அவசரமாக கழட்டி வைக்கும் சூழ்நிலை. கனத்த மௌனத்துடன் எதிர்காலத்தை வெறித்து எதிர்நோக்கும் இவர்களுக்கு நான் கொடுக்க முடிந்தது நம்பிக்கை வார்த்தைகளும் சில வேலை வாய்ப்பு பற்றிய தகவல்கள் மட்டும்தான். அவர்களின் உணர்ச்சிக் குவியலான உரையாடல்கள் என் அறிவின் உணர்வின் தொடாத பல பிரதேசங்களைத் தொட்டது நிஜம்.
மிக மன அழுத்தம் தரும் இந்த அனுபவத்தில் சில நம்பிக்கையூட்டும் படிப்பினைகளையும் பெற்றேன்.
வந்திருந்தவர்களை தொழிலாளிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் என்று இரு விதமாக பிரித்து ஆராய்ந்தால் சில உண்மைகள் புலப்படும்.
பெரும்பாலான தொழிலாளிகள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். அசப்பில் 30கள் போலத் தெரிகிறார்கள். பலருக்கு நரை மிகக் குறைவு. பற்கள் பிரகாசமாக இருந்தன. மிக எளிய உடையிலும் உடல் வலு கச்சிதமாகத் தெரிகிறது. திடமும் உறுதியும் நம்பிக்கை தரும் உடல் மொழியை தந்திருந்தன. பணிவு இருந்தது. பயம் இல்லை. நாளை பற்றி எதுவும் உத்தரவாதம் இல்லாத நிலையிலும் குடும்பத்தின் ஆதரவை இவர்கள் முழுவதும் பெற்றுள்ளவர்கள். “வீட்டில உட்காராம எதுவாவது வேலை செய்யணும். சம்பளம் இவ்வளவு கிடைக்காது. பரவாயில்லை. வீட்டில கூட பசங்க போதும்பாங்கறாங்க. சுறுசுறுப்பா இருந்துட்டு வீட்டில உக்காந்தா உடம்பு கெட்டுரும்!” என்பவை தான் நான் கூடக் குறைச்சலாக அவர்களிடமிருந்து கேட்டவை.
அலுவலகப் பணியாளர்கள் பலர் 40களிலும் இருந்தார்கள். ஆனால் ஒவ்வொருவரும் சுமார் 10 வருடம் அதிக வயதானவர்களாகத் தெரிந்தார்கள். மை படியாத முடி குறைவு. பலருக்கு அதன் அவசியமே இல்லை. உடல் தளர்ந்தும் வடிவம் கெட்டும் இருந்தார்கள். முகத்தில் பதற்றம் நிரந்தரமாக இருந்தது. அடுத்து என்ன என்பதில் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார்கள். தங்கள் சம்பள விகிதம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தார்கள். ஈ.எம்.ஐ கட்டாயங்கள் பலருக்கு இருந்தன. பலரின் குழந்தைகள் வெளிநாடுகளில். ஆரோக்கியம் பேணும் செலவுகள் இவர்களுக்கு அதிகம் இருந்தன. நாளை பற்றிய கற்பனை பயங்கள் அதிகம் இருந்தன.
மிக முக்கியமான வேறுபாடு: பெரும்பாலான தொழிலாளிகள் குறைந்தது ஒரு சகாவுடனாவது வந்தார்கள். அலுவலக ஆசாமிகள் அனைவரும் தனியாகவே வந்தார்கள்.
இது வெள்ளை சட்டை, நீலசட்டை என பிரித்து பகுப்பாயும் உளவியல் முயற்சியெல்லாம் இல்லை. நீங்களே கண் கூடாகக் கண்டு பரிசீலனை செய்து உண்மை அறியக் கோரும் விண்ணப்பம்.
நான் பார்த்தவரை உற்பத்திக் கூடத்தில் பணி புரியும் அனைவரும் (தொழிலாளிகள் மட்டுமல்ல, மேற்பார்வையாளர்கள், பொறியாளர்கள், மேலாளர்கள் அனைவரும்), ஐ.டி, வங்கி போன்ற சேவை நிறுவனங்களில் பணி புரிபவர்களை விட இளைமையானவர்கள். வலுவானவர்கள்.
இதன் காரணங்கள் எல்லாருக்கும் தெரிந்தவை தான். நேரந்தவறாமை என்பது உற்பத்தி சமூகத்தின் பொதுப் பண்பு. 8 மணி முதல் 4 மணி வரை வேலை என்றால் காலை எழும் நேரம், பேருந்து பயணம், காலை உணவு, தேனீர் இடைவெளி, மதிய உணவு, பின்னொரு தேனீர் இடைவெளி, பேருந்தில் வீடு திரும்புதல், இரவு உணவு, தூக்கம் என அனைத்தும் கிட்டத்தட்ட “ப்ரொக்ராமிங்க்” செய்தது போல சீராக அமைக்கப்பெற்றவை. இது அனைவருக்கும் பொது எனும் சமத்துவமும் உண்டு.
இது முதல் மூலக்காரணம். நம் உடலின் Bio Rhythm சற்றும் மாறாமல் வேலையும் வாழ்க்கையும் ஒரு இசைவுத்தன்மை பெற்றவை. எவ்வளவு கடின உழைப்பும் காலம் சார்ந்தது. இந்த வரம் மற்ற பணியிடங்களில் கிடைக்காதது. அதனால் வேலை, உணவு, தூக்கம், பயணம் என ஒவ்வொன்றும் தினம் ஒரு தினுசாக மாறக்கூடியவை.
அடுத்த முக்கியக் காரணம் உணவு. அளவான திட்டமிட்ட உணவை பசித்து சாப்பிடும் பாக்கியம் பெற்றவர்கள் உற்பத்தித்துறை சார்ந்தவர்கள். உணவு நிரப்பிய தட்டில் அதிக தேர்வுகளும் குழப்பங்களும் கிடையாது. சாப்பிடும் போது பேசுவதும் குறைவு, சாப்பிட்டுவிட்டு ஓடினால் தான் லைன் துவங்குவதற்குள் போய் நிற்க முடியும். மாறாக. எந்த நேரமும் நிரம்பி வழியும் தொழில் நுட்ப பூங்காக்களில் உள்ள ஃபுட் கோர்ட்டில் சாப்பிடுவதை விட பேசுவது தான் அதிகம் நடக்கும்.
மூன்றாவது அதி முக்கியக் காரணம்: உடல் உழைப்பு. தினம் வேலை சார்ந்து உற்பத்தி ஆசாமிகள் நடப்பது குறைந்தது சில கிலோமீட்டர்கள். ஆனால், எழுந்து பாத ரூம் செல்லுதல் (அங்கு காரில் செல்ல முடியாது என்பதால்தான் நடக்கிறார்கள்) தவிர எந்த பெரிய உடல் அசைவும் இல்லாத ஆட்கள் தான் மற்ற பணியிடங்களில். இவர்கள் ஆஃபீஸ் ஜிம் பெரும்பாலும் காலியாகக் கிடக்கும். உற்பத்தித் துறை சாராதவர்கள் தான் பீச்சில் வாக்மேனில் பாட்டு கேட்டுக்கொண்டோ, செல்போனில் பேசிக்கொண்டோ கொழுப்பை குறைக்க ஓடுபவர்கள்!
மற்றத் துறைகளை விட உற்பத்தித் துறைகளில் சம்பளம் குறைவு. கேளிக்கைகள் குறைவு. பெரிய மாறுதல்கள் கிடையாது. வெளி நாட்டு வாய்ப்புகள் குறைவு. ஆனால் திட ஆரோக்கியமும் தெளிந்த வாழ்க்கை முறையும் நிச்சயம் கிட்டும்.
வாலிபத்தைத் தக்க வைக்க நினைக்கும் மக்கள் கூட்டம் இங்கு பெரிய சந்தை. மருந்து பொருட்கள், சிகிச்சைகள், மதம் சார்ந்த பயிற்சிகள் என விரியும் பல்லாயிரம் கோடி சந்தை. சீனர்கள் புலிகளை வேட்டையாடிக் கொன்று குவிப்பதும் இதனால் தான். (பாரம்பரிய சீன முறையில் பலான சிகிச்சைக்கு புலிகளின் உள் உறுப்புகளால் தான் மருந்துகள் செய்யப்படுகின்றன.)
ஆனால் பைசா செலவில்லாமல் இங்கு நம் கண் முன்னால் உற்பத்தித் துறை சார்ந்த தொழிலாளிகள் வாலிபர்களாக வாழ்ந்து வருகிறார்கள். இதை உற்பத்தி துறை சார்ந்த நிறுவனங்கள் சரியான முறையில் “Employer Branding” அல்லது “Sector Branding” செய்யவில்லை என்றே தோன்றுகிறது.
இந்த செய்திகள் கல்லூரி மாணவர்களுக்கு சொல்ல வேண்டியவை. நவீன பணியிடங்கள் பற்றிய மாயையில் பலர் உற்பத்திதுறையை உதாசீனப்படுத்தி வருகிறார்கள்.
எல்லாத் துறையினருக்கும் திட்டமிட்ட வேலை, நேரத்திற்கு உணவு, சரியான நேரத்தில், சரியான அளவு தூக்கம், பணி சார்ந்த மன நிம்மதி / பெருமிதம் இவை தான் வாலிபத்தின் எளிய ரகசியங்கள்.
வருடந்தோறும் உடல் பரிசோதனை செய்யச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். அதே போல வயதாகியும் வாலிபம் காக்கும் மனிதர்களின் வாழ்க்கை முறைகளை அறிவதும் அவசியம். அதற்கு வேறெங்கும் செல்ல வேண்டாம். ஒரு உற்பத்தி தொழிற்சாலைக்கு சென்று வாருங்கள்!
gemba.karthikeyan@gmail.com