

சென்னை சென்ட்ரல் அருகே பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் கூடுதல் நேரம் நிறுத்தப்பட்டதால், ஆத்திரமடைந்த பயணிகள் தண்டவாளங்களில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், ரயில் போக்கு வரத்து ஒன்றரை மணி நேரம் ஸ்தம்பித்தது.
பொன்னேரியில் இருந்து சென்ட்ரலுக்கும் (மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ்), ஆவடியில் இருந்து சென்ட்ரலுக்கும் 2 மின்சார ரயில்கள் நேற்று காலை 9 மணியளவில் வந்து கொண்டிருந்தன. பேசின் பிரிட்ஜ்க்கு வந்த ரயில்கள் குறித்த நேரத்துக்குப் பிறகும் புறப்படவில்லை.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்வோரும், டாக்டர்களிடம் சிகிச்சைக்கு முன் அனுமதி பெற்றோரும், சென்ட்ரலில் ரயிலைப் பிடிக்க வேண்டியவர் களும் என அவசரமாக செல்ல வேண்டியவர்கள் ஆத்திரமடைந்தனர்.
ரயில்வே நிர்வாகமும் தாமதத்துக்கான காரணத்தைத் தெரிவிக்காததால், ரயிலில் இருந்து இறங்கி தண்டவாளங்களில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந் ததும் ரயில்வே அதிகாரிகளும், ரயில்வே பாதுகாப்புப் படை போலீசாரும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்தினர்.
கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் வரும் மின்சார ரயில்கள் அடிக்கடி பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத் தில் நிறுத்தி வைக்கப்படுவதால், தாங்கள் பெரும் அவதிக்குள்ளாகிறோம் என்று பயணிகள் தெரிவித்தனர். இதுபோல மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
எனினும், மறியலை கைவிடாததால் காலை 9.30 மணியில் இருந்து 10.55 மணி வரை சுமார் ஒன்றரை மணி நேரம் ரயில் போக்குவரத்து முற்றி லுமாகப் பாதித்தது.
ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசியதாக 4 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுபோன்ற சம்பவம் அடிக்கடி நடப்பதாகக் கூறப்படுவது குறித்து ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தன்பாத் ஆலப்புழை எக்ஸ்பிரஸ் சென்ட்ரலுக்கு வந்து நேற்று அதிகாலை 3.25 மணிக்குப் புறப்பட வேண்டும். தாமதமாக வந்ததால், நேற்று காலை 9.20 மணிக்குத்தான் புறப்பட்டுச் சென்றது. ஆந்திராவில் புயல் தாக்குதல் காரணமாக, மாற்றுப் பாதையில் இந்த ரயில் வந்ததால் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பேசின்ட்பிரிட்ஜ் ரயில் நிலையத் துக்குப் போகும்போது செயினை இழுத்து ரயிலை நிறுத்திவிட்டனர். எந்தப் பெட்டியில் செயின் இழுக்கப் பட்டது என்பதைக் கண்டறிந்து, பிரேக் கிங் சிஸ்டத்தை சரிசெய்ய 10 நிமிடங்கள் ஆகிவிட்டது. அந்த நேரத்தில் மேற்கண்ட 2 மின்சார ரயில்கள் வந்ததால், பேசின் பிரிட்ஜில் நிறுத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால்தான் பயணிகள் ஆத்திர மடைந்துள்ளனர். கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ஏதாவது ஒரு ரயில் தாமதமாக வந்துவிட்டால், மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கும். 15 ஆண்டுகளாக இப்பிரச்சினை இருக்கிறது.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஒரு மிகப்பெரிய திட்டத்தை செயல்படுத்தினால் மட்டுமே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்.
பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் இருந்து மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் வரை கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்களுக்காக கூவம் ஆற்றுக்கு மேலே உயர்மட்ட ரயில் பாதை அமைக்க வேண்டும். இதுகுறித்து ரயில்வேயிக்கு கருத்துருவும் ஏற்கனவே அனுப்பியுள்ளோம் என்றார்.