சுடுகாட்டு நிலத்தை அத்தை மகளுக்கு பட்டா போட்டு வழங்கினாரா எம்எல்ஏ? - அமைச்சர் குற்றச்சாட்டுக்கு திமுக எதிர்ப்பு
சட்டப்பேரவையில் நேற்று சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதம் வருமாறு:
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்:
திமுக அரசு மீது அமைச்சர்கள் குற்றம்சாட்டினால் ஆதாரத்தோடு பேச வேண்டும். இல்லையெனில் அதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.
அமைச்சர் டி.ஜெயக்குமார்:
கடந்த திமுக ஆட்சியில் மீன்வளத் துறை அமைச்சராக இருந்த, தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.சாமி, தனது அத்தை மகளுக்கு சுடுகாட்டு நிலத்தை பட்டா போட்டு வழங்கினார்.
அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷமிட்டனர். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது.
கே.பி.பி.சாமி (திமுக):
அமைச்சர் கூறிய குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.
மு.க.ஸ்டாலின்:
அமைச்சர் தனது குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தை அளிக்கும்வரை அவர் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.
பேரவைத் தலைவர் பி.தனபால்:
அமைச்சர்கள் ஒரு விஷயத்தை குறிப்பிட்டுப் பேசினால் அதற்கு பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள் என்றுதான் பொருள். அமைச்சர் பேசியதும், அதற்கு திமுக உறுப்பினர் கே.பி.பி.சாமி பதிலளித்ததும் அவைக் குறிப்பில் உள்ளன. எனவே, அமைச்சர் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டியதில்லை.
