Last Updated : 20 Oct, 2014 09:58 AM

 

Published : 20 Oct 2014 09:58 AM
Last Updated : 20 Oct 2014 09:58 AM

தெற்காசியாவின் மதச்சார்பின்மை

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகள் தங்கள் சிறுபான்மையினரை எப்படி நடத்துகின்றன?

‘சார்க்’ (தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு மாநாடு) அமைப்பின் உறுப்பு நாடுகளில் பரப்பளவு, மக்கள்தொகை, மொத்த தேசிய உற்பத்தி மதிப்பு ஆகியவற்றில் இந்தியாதான் மிகப் பெரிய நாடு. ஏனைய நாடுகளைவிட சிறப்பானதொரு அம்சமும் இந்தியாவிடம் இருக்கிறது; குறிப்பிட்ட எந்த ஒரு மதத்துடனும் இந்தியா தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை என்பதுதான் அது.

பூடான், இலங்கை ஆகிய இரண்டுக்குமே பவுத்தம்தான் அதிகாரபூர்வ மதம். பாகிஸ்தான், இஸ்லாமியக் குடியரசு. மாலத்தீவில் சன்னி முஸ்லிம் பிரிவுதான் அதிகாரபூர்வ மதம். 2008 வரையில் நேபாளம் இந்து நாடாக இருந்தது. 1971-ல் உதயமான வங்கதேசம் மதச்சார்பற்ற குடியரசு நாடாக இருந்தது. 1980-களில் ஜெனரல் எர்ஷாத் அதிபராக இருந்தபோது, அதன் அரசியல் சட்டம் திருத்தப்பட்டு இஸ்லாத்துக்கு உரிமைமிக்க தனியிடம் கிடைத்தது. இந்த நாடுகளைப் போல அல்லாமல் இதுவரை இந்தியா மதச்சார்பற்ற நாடாகவே திகழ்கிறது.

ஆனால், நம்முடைய அரசியல் சட்டம் மதச்சார்பற்ற தன்மையைப் பறைசாற்றினாலும் மத அடிப்படையிலான பேரினவாதம் அசிங்கமான தனது முகத்தை அடிக்கடி காட்டிக்கொண்டிருக்கிறது. 1950-களில் சற்று அமைதி நிலவியது. பிறகு, ஜபல்பூரில் நடந்த இந்து, முஸ்லிம் கலவரத்தால் அது குலைந்தது. 1960-களிலும் 1970-களிலும் உத்தரப் பிரதேசம், பிஹார், குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் மதங்களுக்கு இடையிலான வன்முறை மோதல்கள் தொடர்ந்தன.

1984-ல் டெல்லியிலும் சில வட இந்திய நகரங்களிலும் இந்திரா காந்தி படுகொலையையொட்டி சீக்கியர்கள் வெட்டிச்சாய்க்கப்பட்டனர். 1990-களில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழ்ந்த இந்துக்களில் பெரும்பாலான

வர்களை மதஅடிப்படைவாதிகள் தாக்கி வெளியேற்றினர். ராமஜன்ம பூமி இயக்கத்தால் 1980-களிலும் 1990-களிலும் பலர் பலிவாங்கப்பட்டனர். இவற்றின் தொடர்ச்சியாக இந்தியாவின் வடக்கிலும் மேற்கிலும் கலவரங்கள் ஏற்பட்டன. அவற்றில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் அப்பாவி முஸ்லிம்களே. 2002-ல் குஜராத்தில் இந்து அடிப் படைவாதிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்களைக் கொன்றனர், ஆயிரக் கணக்கானவர்கள் வீடிழந்தனர்.

ஆர்எஸ்எஸ் செல்வாக்கு

இந்தியாவின் பல பகுதிகளில் முஸ்லிம்கள் இப்போதும் பாதுகாப்பற்றவர்களாகவும் தாக்குதலுக்கு ஆளாகிறவர்களாகவும் இருக்கின்றனர். இந்த நிலைமை வெகுவிரைவில் மாறிவிடாது.

பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் பலமடங்கு செல்வாக்கைப் பெருக்கிக்கொள்ளும் ஆர்எஸ்எஸ் இயக்கம், இந்து மதவாத அரசை ஏற்படுத்திவிட வேண்டும் என்று துடிக்கிறது.

அந்த இயக்கத்தின் தலைவர், பாஜகவைச் சேர்ந்த சில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் சமீபத்திய பேச்சுகளில், இந்து பேரினவாத ஆதிக்க உணர்வு வெளிப்படுகிறது. வலதுசாரி இந்துத்துவக் கட்சியின் ஆதிக்கம் காரணமாக இந்திய அரசியல், சமூக வாழ்க்கை ஆகியவற்றின் இயற்கைத் தன்மையே மாறி, மதச்சகிப்புத்தன்மை, பன்மைத் தன்மை ஆகியவற்றிலிருந்து வெகுதூரம் விலகிச் சென்று கொண்டிருக்கிறது.

பாகிஸ்தான்

இந்தியா தனது மதச் சிறுபான்மையோரை நடத்துவது இருவிதமாகவும் இருக்கிறது. ஆனால், பாகிஸ்தானோடு ஒப்பிடும்போது இங்குள்ள நிலை பரவாயில்லை. இந்தியாவில் அரசுக்கும் மத நம்பிக்கைகளுக்கும் இடையே இடைவெளி இருக்கிறது. பாகிஸ்தானில் அரசே இஸ்லாமியத் தன்மையோடு திகழ்கிறது. அங்குள்ள சிறுபான்மையினத்தவருக்குத் தங்களுடைய இடம் எது என்று தெரியும்; முன்பு, அவர்கள் திட்டமிட்டு வேட்டையாடப்பட்டதில்லை. ஆனால், பாகிஸ்தானில் (1977-88) அதிபர் ஜியா உல் ஹக் பதவிக் காலத்தில் இஸ்லாமியமயமாதல் விரைவுபெற்றது. ஷரியத் சட்டம் தேசியச் சட்டமானது. சிறுபான்மைச் சமூக மக்களின் வாயை அடைக்க அவர்கள் மீது மதநிந்தனை வழக்குகள் போடப்பட்டன. அகமதியர்கள் இஸ்லாமியர் அல்லாதோராக அறிவிக்கப்பட்டனர். வஹாபிய பாணியில் இஸ்லாத்தைப் போதிக்கும் ஏராளமான மதரசாக்கள் வளைகுடா நாடுகளிலிருந்து கிடைத்த நன்கொடைகள் மூலம் தொடங்கப்பட்டன. சன்னி முஸ்லிம்கள் முதலில் இந்துக்கள், கிறிஸ்தவர்களைக் குறிவைத்தனர். எண்ணிக் கையில் குறைவாக இருந்ததால், அவர்கள் எளிதாக அடக்கப்பட்டனர். பிறகு, அவர்களுடைய கவனம் ஷியாக்கள் மீது சென்றது. ஒருகாலத்தில் ஷியாக்களும் அரசியலிலும் தொழிலிலும் ஆதிக்கம் செலுத்தினர். முகம்மது அலி ஜின்னாவே ஷியாதான். சமீப காலமாக ஷியாக்களின் வழிபாட்டிடங்களும் குடியிருப்புகளும் மூர்க்கத்தனமாகத் தாக்கப்படுகின்றன. இந்துக்களையும் கிறிஸ்தவர்களையும் இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தக் கூடாது என்று நம்பும் அரசியல் தலைவர்கள், அறிவுஜீவிகளும் தாக்கப்படுகின்றனர்.

கிழக்கு பாகிஸ்தான்

நாடு சுதந்திரம் பெற்றபோது மேற்கு பாகிஸ்தானைவிட கிழக்கு பாகிஸ்தானில் இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். 1950-களில் இந்துக்கள் தொடர்ச்சியாக இந்தியாவில் குடியேறினார்கள். காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஹஸ்ரத் பால் மசூதியில், நபிகளின் ‘நினைவுப் பொருள்’ காணாமல் போனதாகச் செய்திகள் வந்தவுடன், கிழக்கு பாகிஸ்தானில் இந்துக்கள் தாக்கப்பட்டனர். மீண்டும் பெரும் எண்ணிக்கையில் இந்துக்கள் அங்கிருந்து இந்தியாவுக்கு ஓடிவந்தனர். அப்படியிருந்தும் வங்கதேச விடுதலைப் போரின்போது 1971-ல் ஏராளமான இந்துக்கள் வங்கதேசத்திலேயே வாழ்ந்தனர். வங்கதேச விடுதலை மத அடிப்படையில் அல்லாமல் மொழி அடிப் படையிலானது என்பதால், இந்துக்களும் ஆயுதம் ஏந்திப் போராடினர்.

வங்கதேசம் பிறந்தபோது மதச்சார்பற்ற நாடாகத்தான் இருந்தது. ரவீந்திரநாத் தாகூரின் பாடலையே தேசிய கீதமாக ஏற்றது. சுதந்திரம் அடைந்த பிறகு 40 ஆண்டுகளாக அங்கு இஸ்லாமியமயமாதல் மெதுவாக நடந்தேறியது. சமீபத்திய காலத்தில் அது வன்செயல்களுடன், பாகிஸ் தானைப் போலவே அரங்கேறுகிறது.

இலங்கை

இலங்கையிலும் அரசியல் மோதலானது மத அடிப்படையில் அல்லாமல் மொழி அடிப்படையில்தான் தொடங்கியது. தெற்கில் வாழ்ந்த சிங்களர்கள், வடக்கில் வாழ்ந்த தமிழர்களின் பொருளாதார வளத்தைக் கண்டு அஞ்சினார்கள். எனவே, சிங்களம் தெரிந்தால்தான் கல்லூரியில் படிக்க முடியும்; அரசு வேலையில் சேர முடியும் என்று கட்டாயப்படுத்தினார்கள். இதுவே, தமிழர், சிங்களர் மோதலுக்கான மூல காரணம்.

இந்த மோதல் உச்சத்தில் இருந்தபோது 1972-ல் இலங்கை அரசின் தேசிய மதமாக பவுத்தம் அறிவிக்கப் பட்டது. தமிழர்களில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ் தவர்கள் இருந்தனர், பவுத்தர்கள் யாருமில்லை. மதப் பேரினவாதம் மொழிப் பேரினவாதமாகியது. இலங்கை ராணுவத்துக்கு சிங்கள பவுத்த சன்யாசிகள் ஆதரவாளர்களாக மாறினார்கள். தமிழர்களைக் கடுமை யாக ஒடுக்குமாறு தூண்டினர். 2009 போருக்குப் பிறகு எதேச்சாதிகார அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாளர் களாகினர், சிங்கள பவுத்தத் துறவிகள். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கையின் கிழக்குப் பகுதியில் முஸ்லிம்களைக் கடுமையாகத் தாக்கினார்கள் பவுத்தர்கள்.

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் சகிப்புத்தன்மை மிக்க வர்கள் அல்ல. அவர்களும் யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு ஆகிய ஊர்களில் முஸ்லிம்களையும் அவர்களுடைய வீடுகளையும் மசூதிகளையும் தாக்கினர். தமிழ் கிறிஸ்தவர்களும் அலைக்கழிக்கப்பட்டனர். சிங்களர், தமிழர் வாக்குவாதத்தை பவுத்தர், இந்து மோதலாக விடுதலைப் புலிகள் மாற்றினார்கள்.

பூடான்

சார்க் நாடுகளிலேயே பூடான்தான் அமைதியான, இயற்கை அழகு நிறைந்த நாடு. ஆனால், பவுத்த அடை யாளத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக அந்த நாடும் 1990-களில் ஏராளமான இந்துக் குடும்பங்களைத் தங்கள் நாட்டிலிருந்து நேபாளத்துக்கு விரட்டியது பலருக்கும் தெரியாது.

நேபாளம்

19-வது, 20-வது நூற்றாண்டுகள் முழுக்க நேபாளம் இந்து நாடாகவே திகழ்ந்தது. அந்நாட்டு மன்னர், பூவுலகில் விஷ்ணுவின் பிரதிநிதியாகவே கருதப்பட்டார். 2008-ல் மன்னராட்சி முறை கைவிடப்பட்டு மதச்சார்பற்ற குடியரசு நாடாகியது நேபாளம். தெற்காசிய நாடுகளிலேயே மத மோதல்கள் மிகக் குறைவாக நடந்தது நேபாளத்தில்தான். சில சந்தர்ப்பங்களில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டுள்ளனர். ஆனால், அங்கு நிலஉடைமையாளர்களுக்கும் நிலமற்றவர்களுக்கும் இடையே, மலைப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கும் சமவெளி மக்களுக்கும் இடையே, பிராமணர்களுக்கும் பிராமணர் அல்லாதாருக்கும் இடையேதான் மோதல்கள் நடைபெறும்.

தெற்காசியாவில் இந்தியாவும் இலங்கையும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கொண்ட ஜனநாயக நாடுகளாக வெகுகாலம் திகழ்ந்தன. இப்போது பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளமும் அந்த வரிசையில் சேர்ந்திருக்கின்றன. பூடானில்கூட தேர்தல் நடந்திருக்கிறது. முதல்முறையாக சார்க் அமைப்பின் எல்லா நாடுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள்தான் பதவியில் இருக்கின்றன.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இருப்பதாலேயே மக்களிடையே சமத்துவம் ஏற்பட்டுவிடவில்லை. வறுமை யும் ஏற்றத்தாழ்வும் பெரிதாக இருக்கிறது. மொழி, மதம் ஆகிய காரணங்களாலும் மக்களிடையே வேறுபாடு காட்டப்படுகிறது. பாகிஸ்தானில் ஒரு இந்துவாகவோ கிறிஸ்தவராகவோ ஷியாவாகவோ இருப்பதும், இலங்கையில் இந்துவாகவோ முஸ்லிமாகவோ இருப் பதும், வங்கதேசத்தில் இந்துவாகவோ பவுத்தராகவோ இருப்பதும், இந்தியா, நேபாளத்தில் முஸ்லிமாக இருப்பதும் சிரமம்தான்.

- ராமச்சந்திர குஹா, ‘இந்தியா ஆஃப்டர் காந்தி’ உள்ளிட்ட வரலாற்று நூல்களின் ஆசிரியர்;

தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x