

தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை ரூ.2 உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வு நாளை (திங்கள்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
திருமலா, டோட்லா, ஹெரிடேஜ், ஜெர்சி ஆகிய தனியார் பால் நிறுவனங்கள் கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி முதல் முறையாக பால் விலையை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தின. பின்பு மார்ச் 9 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் மீண்டும் பால் விலையை உயர்த்தின.
இந்நிலையில் முன்னணி தனியார் பால் நிறுவனங்களான திருமலா, ஹெரிடேஜ் ஆகியவை நாளை (திங்கள்கிழமை) முதல் பால் விலையை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்த முடிவு செய்துள்ளது. இந்த நிறுவனங்களின் கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ரூ. 46-க்கும், சமன்படுத்தப்பட்ட பால் ரூ.42-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த வகை பால்களின் விலை ரூ. 2 உயர்த்தப்படுவதாக பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
குழு அமைக்க வேண்டும்
இந்த விலை உயர்வு குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். ஏ.பொன்னுசாமி கூறும்போது, “தனியார் பால் நிறுவனங்கள் ஒவ்வொரு முறையும் தன்னிச்சையாக பால் விலையை உயர்த்தி வருகின்றன. பால் விலையை அரசுதான் நிர்ணயம் செய்யவேண்டும். பால் விலை உயர்வை கட்டுப்படுத்த பொதுமக்கள், பால் முகவர்கள் சங்கம், நிறுவனங்கள்,
ஐ. ஏ. எஸ். அதிகாரி ஆகியோர் அடங்கிய நால்வர் குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும். தன்னிச்சையாக அடிக்கடி பால் விலை உயர்த்தி வரும் தனியார் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும்” என்றார்.