Published : 03 May 2017 07:25 PM
Last Updated : 03 May 2017 07:25 PM

டாஸ்மாக் கடைகளை மாற்றுவதில் கவனம் செலுத்தும் அரசு மக்கள் பிரச்சினைகளைப் பற்றி கவலைப்படவில்லை: ஸ்டாலின்

டாஸ்மாக் கடைகளை மாற்றுவதில் கவனம் செலுத்தும் அரசு மக்கள் பிரச்சினைகளைப் பற்றி கவலைப்படவில்லை என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு, தொகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

இதனைத்தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''கொளத்தூர் தொகுதியைப் பொறுத்தவரை பல பகுதிகளில், நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது சதவிகித இடங்களில் குடிநீர் பிரச்சினை இருந்து கொண்டிருக்கிறது. எனவே, குடிநீர் பிரச்சினையில் குடிநீர் வடிகால் வாரியம் உடனடியாக முழு கவனத்தை செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இதே சென்னை மாநகரத்தில் நான் மேயராக இருந்தபோதும், அதைத்தொடர்ந்து மா.சுப்பிரமணியம் மேயராக இருந்தபோதும் கூட குடிநீர் பிரச்சினைகள் வந்திருக்கின்றன. அப்படி குடிநீர் பிரச்சினைகள் வருகிறபோது அரசு துறைகளை சார்ந்திருக்கக்கூடிய எல்லா துறைகளையும் இணைத்து, ஒருங்கிணைப்பு குழுவை (Joint Committee) ஏற்படுத்தி, உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுத்து, அந்தப் பிரச்சினைகளை நாங்கள் உடனுக்குடன் தீர்த்து வைத்திருக்கிறோம்.

ஆனால், இப்போது இருக்கக்கூடிய அரசு அதுபோன்ற குழுக்களை எல்லாம் அமைப்பது இல்லை. அதனால், குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணாமல், மாநகராட்சி சம்பத்தப்பட்ட சாலைகளை தோண்ட வேண்டும் மற்றும் அதற்குரிய அனுமதியை வாங்க வேண்டும் என்று குடிநீர் வடிகால் வாரியம் சொல்கிறது, மின்கேபிள்கள் இருப்பதால் மின்துறையின் ஒப்புதல் வேண்டும் என்று சொல்கிறார்கள் என்று ஒவ்வொரு துறையும் மாறி மாறி சொல்லி, இப்படியே காலங்கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருங்கிணைப்புக் குழு இருந்திருந்தால் உடனுக்குடன் இந்தப் பிரச்சினைகளை எல்லாம் சரி செய்திருக்க முடியும். அந்தப் பணியை அரசு செய்யாமல் இருப்பது உள்ளபடியே கண்டிக்கத்தக்கது, வேதனைக்குரிய ஒன்று.

தமிழக அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், டாஸ்மாக் வருவாய் குறைவாக இருப்பதால் அதை உயர்த்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றதாக செய்தி வெளியாகி இருக்கிறது. அதாவது, நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகள் இருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு தந்ததற்குப் பிறகு, மாநில - மத்திய நெடுஞ்சாலைத்துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளை மாநகராட்சி, நகராட்சிகளின் கட்டுப்பாட்டுக்கு மாற்றுகிற பணிகளில்தான் இன்றைக்கு இந்த அரசு ஈடுபட்டிருக்கிறதே தவிர, மக்களுடைய பிரச்சினைகளை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படவில்லை என்பதுதான் வேதனைக்குரியதாக இருக்கிறது.

ஐ.நா. மனித உரிமை வாரியத்தில் பேச அழைப்பு வந்திருக்கிறது. இன்னும் முடிவு செய்யவில்லை. முடிவு செய்யப்பட்ட பின்னர் சொல்கிறேன்.

மே தின பொதுக்கூட்டத்தில் பேசியுள்ள ஓ.பன்னீர்செல்வம், ஆட்சியில் இருந்தபோது விவசாயிகள் பிரச்சினைகளை தீர்க்காத திமுக இப்போது போராட்டம் நடத்துவதை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று தெரிவித்து இருக்கிறார்.

ஜெயலலிதா மருத்தவமனையில் இருந்தபோது அவர்தான் தற்காலிக முதல்வராக இருந்திருக்கிறார். அதேபோல், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரும் அவர்தான் இரண்டு மாத காலத்துக்கு முதல்வராக இருந்திருக்கிறார். அப்போது நீதி விசாரணை கேட்கவில்லை. அவருடைய பதவி பறிக்கப்பட்டதற்குப் பின்னர் ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை கேட்கும் ஓபிஎஸ்தான் இப்படிப்பட்ட கருத்துகளை சொல்கிறார். அந்தக் கருத்துகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை.

முன்பெல்லாம் என்னை விமர்சிக்காத ஸ்டாலின், சமீப காலமாக என் மீது விமர்சிக்க என்ன காரணம் என்று தெரியவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து இருக்கிறார். சட்டப்பேரவை அவைக்குறிப்புகளை எடுத்துப்பார்த்தால் அவர் முதல்வராக இருந்தபோது, நிதி அமைச்சராக இருந்தபோது, சட்டப்பேரவையில் அவர் துறையை சார்ந்த வகையில் நான் என்னென்ன விமர்சனம் செய்திருக்கிறேன், என்னென்ன குற்றச்சாட்டுகள் வைத்திருக்கிறேன் என்பது தெரியவரும்.

பாஜகவை விமர்சனம் செய்யாதீர்கள் என்று அமைச்சர்களை முதல்வர் வலியுறுத்தியதாக நேற்றைய தினம் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதல்வர், அமைச்சர்கள் எல்லாம் ஏறக்குறைய 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா செய்த விவரங்கள் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடந்தபோது ஆதாரங்களுடன் சிக்கியுள்ளன. அதனுடைய எதிரொலியாகவே மத்தியில் இருக்கக்கூடிய பாஜக ஆட்சியை விமர்சனம் செய்யக் கூடாது என்று சொல்லி இருக்கிறார் என்று நான் கருதுகிறேன்'' என்று ஸ்டாலின் கூறினார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x