

அருப்புக்கோட்டை அருகே மரத் தின் மீது கார் மோதிய விபத்தில் திருச்சுழி காவல் துணைக் கண்காணிப்பாளர் வெற்றிவேல் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கோவையைச் சேர்ந்தவர் வெற்றிவேல்(54). இவர் 1987-ல் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியில் சேர்ந்தார். தூத்துக்குடியில் மாவட்டக் குற்றப் பிரிவு டிஎஸ்பி யாகப் பணியாற்றினார். பின்னர், 2015-ல் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி டிஎஸ்பியாக நியமிக்கப் பட்டார்.
இந்நிலையில், கோவில்பட்டி யில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பின்னர் தானே காரை ஓட்டிக்கொண்டு நேற்று காலை திருச்சுழிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
பாலவனந்தம் அருகே சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் இருந்த வாகை மரத்தின் மீது மோதியது. இதில், நெற்றியில் பலத்த காயமடைந்த டிஎஸ்பி வெற்றிவேல் மயங்கி விழுந்தார். தகவலறிந்த 108 ஆம்புன்ஸ் ஊழியர்கள் டிஎஸ்பியை வேனில் ஏற்றிய சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார்.
விபத்து குறித்து, அருப்புக் கோட்டை தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்