

தோட்டக்கலைத் துறையில் பல்வேறு திட்டங்களில் விவசாயிகளிடம் ஆர்வம் இல்லாததால் அதற்கு ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மானியம் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்படுகிறது.
தோட்டக்கலைத் துறையில் காய்கறி, பழங்கள், பூக்கள் உற்பத்தியை அதிகரிக்க பல்வகை மானியத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. சமீபத்தில் பெருநகர காய்கறித் தொகுப்பு வளர்ச்சித் திட்டத்தில் ரெபிஜிரேட்டர் வேன் (குளிர்சாதன வேன்), வெஜிடபிள் ஏசி ஷாப் (குளிர்பதன கடை), காய்கறி சேகரிப்பு மையம், பசுமை குடில், காய்கறி பரப்பு அதிகரித்தல் உள்ளிட்ட பல்வகை தோட்டக்கலை பயிர் சாகுபடிகளுக்கு விவசாயிகளுக்கு வழங்குவதற்கு ரூ.58 லட்சம் மானியம், மதுரை மாவட்ட தோட்டக்கலை துறைக்கு ஒதுக்கப்பட்டது. இதில் ரெபிரிஜிரேட்டர் வேன், வெஜிடபிள் ஏசி ஷாப், காய்கறி சேகரிப்பு மையம், நடமாடும் காய்கறி வண்டி உள்ளிட்ட திட்டங்களில் மானிய நிதி வாங்க விவசாயிகளிடம் ஆர்வம் இல்லை. இதற்காக ஒதுக்கப்பட்டு மீதம் உள்ள மானியம் ரூ.27.75 லட்சத்தை திருப்பி அனுப்ப உள்ளது.
சொட்டுநீர் பாசனத் திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப் படுகிறது. இந்த திட்டத்தில் மாவட்டத்தில் 2,500 ஹெக்டேர் மட்டுமே விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைத்துள்ளனர். இன்னும் 18 ஆயிரம் ஹெக்டேரில் விவசாயிகள், சொட்டு நீர் பாசன வசதிகளை அமைக்கலாம். இதற்கு விவசாயிகளிடம் ஆர்வம் இல்லாததால், இந்த திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியும் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதுபோல், மாடிவீட்டுத் தோட்டத் திட்டத்தில் கடந்த ஆண்டு ரூ.15 ஆயிரம் கிட் வந்தது. இதில் 2 ஆயிரம் மட்டுமே விற்பனையானது.
விவசாயிகள் கூறியது: சொட்டு நீர் பாசனம், எல்லா மண்ணுக்கும், எல்லா காய்கறி, பழங்கள், மலர் செடிகளுக்கும் எடுபடவில்லை. ஒரு சில காய்கறி, பழமரங்களுக்கு நன்கு தண்ணீர் கட்டினால்தான் அதிக விளைச்சல் கிடைக்கும். சொட்டு நீர் பாசனத்தில் ஒரு இடத்தில் மட்டும் தண்ணீர் பாயும். எல்லா இடத்துக்கும் ஈரம் ஏகமாக பரவுவதில்லை. சொட்டு நீர் பாசனம் அைமத்த விவசாயிகள் பலர், அதில் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் அதை மாற்றியுள்ளனர். பாத்தி பாசனத்தில் கிடைத்த தெளிவான நிறைவான பாசனம் சொட்டு நீர் பாசனத்தில் கிடைப்பதில்லை. அதுபோல், பெரிய மானிய திட்டங்கள் பெரும் விவசாயிகளுக்குதான் கைகொடுக்கும். அவர்களே அந்த திட்ட மானியங்களை வாங்க முன் வராதபோது சிறு, குறு விவசாயிகள் வாங்க பொருளாதார வசதியில்லை. ஆனால், நல்ல மானியத்திட்டங்கள், விவசாயம் பயன்படுத்த ஆர்வம்காட்டும் திட்டங்களில் பயனாளிகள் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதால் சிறு, குறு விவசாயிகள் பலன் பெற முடியவில்லை என்றனர்.
தோட்டக் கலைத்துறை அதிகாரிகள் கூறியது:
சொட்டு நீர் பாசன திட்டத்தை பயன்படுத்த விவசாயிகளிடம் விழிப்புணர்வு இல்லை. மற்ற திட்டங்களில் சில குறை உள்ளது. தமிழகம் முழுவதுமே சொட்டு நீர் பாசனம் போன்ற சில மானிய திட்டங்களில் 35 சதவீதம் முதல் 100 சதவீதம் மானியம் இருந்தும் அதற்காக ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான நிதி பயன்பாடு இன்றி திருப்பி அனுப்பப்படுகிறது. மானியத் திட்டங்களை தேவையான இடங்களுக்கு வழங்கினால் சிறப்பாக இருக்கும். இந்த திட்டங்களை முழுமையாக செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றனர்.