

ரயில்வே துறையில் முதல் முறையாக தெற்கு ரயில்வேயின் கீழ் செயல்பட்டு வரும் பெரம்பூர் கேரேஜ் மற்றும் வேகன் பணிமனைக்கு இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் சுற்றுச்சூழல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் இந்த பணிமனையில் 1857-ம் ஆண்டு முதல் பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில் பெட்டிகள் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில்வேக்கு சொந்தமான இடங் களில் சுற்றுச்சூழலை பாதுகாக் கும் வகையில் பல்வேறு நடவடிக்கையை ரயில்வே துறை எடுத்து வருகிறது.
குறிப்பாக, மின் சிக்கனத்துக்காக குறைந்த மின்சாரத்தை பயன்படுத்தும் மின்விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. ரயில் பெட்டிகள் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள தினமும் சுமார் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இந்த தண்ணீர் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. சோலார் வாட்டர் ஹீட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், உணவு கழிவுகள் மற்றும் இதர கழிவுகளை பயன்படுத்தி எரிவாயு தயாரிக்கப்படுகிறது. இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுச்சூழல் பணிகளை பாராட்டி இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் கீரீன்கோ வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
ரயில்வே துறையிலேயே முதல் முறையாக பெரம்பூர் கேரேஜ் மற்றும் வேகன் பணிமனைக்குத் தான் இந்த பெருமை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.