ராமேசுவரம் கடலில் மிதக்கும் இலங்கையின் சீகல் பறவைகள்: சுற்றுலா பயணிகள் ஆர்வம்

ராமேசுவரம் கடலில் மிதக்கும் இலங்கையின் சீகல் பறவைகள்: சுற்றுலா பயணிகள் ஆர்வம்
Updated on
1 min read

ராமேசுவரம் கடற்பகுதியில் இலங்கையின் சீகல் பறவைகள் மிதக்கும் காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் ஆண்டு தோறும் அக்டோபர் முதல் ஏப்ரல் வரையிலும் பறவைகள் சீசன் ஆகும். இந்த இடைப்பட்ட காலத்தில் ராமநாதபுரத்தில் மாவட்டத்தில் உள்ள காஞ்சிரங்குடி, சித்தி ரங்குடி, மேலச்செல்வனூர், கீழச்செல்வனூர் ஆகிய பறவைகள் சரணாலயங்களுக்கு பிளமிங்கோ, ரஷ்ய நீர்வாத்து, மஞ்சள் மூக்கு நாரை, உள்ளான், அரிவாள் மூக்கன், நாரை, பாம்பு தாரா, நீர்காகங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பறவைகள் வரத் தொடங்கும்.

இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் கண்மாய்கள் வறண்டும், நீர்நிலைகளும் நிரம்பவில்லை. பல மரங்கள் பட்டுப்போனதாலும், வெளிநாட்டில் இருந்து வரும் பறவைகள், கூடு கட்டி, அதில் தங்கி, முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்ய வாய்ப் பில்லாமல் போகும் சூழல் ஏற் பட்டது. இந்நிலையில் இலங்கை கடற்கரைகளின் அங்கமாக இருக்கும் சீகல் என்கிற அழகான கடற்பறவைகள் ராமேசுவரம் வரத் தொடங்கியுள்ளன. அதிகபட்சம் 2 கிலோ வரை எடையுள்ள இந்த பறவைகளை மீனவர்கள் நீர் காகங்கள் என்று அழைக்கின்றனர். தினமும் காலை 9 மணிக்கு சின்னச் சின்ன குழுக்களாக கூடும் இந்த பறவைகள் மாலை 4 மணி வரையிலும் கடலில் மிதந்தபடியும், பறந்தும் இரை தேடுகின்றன.

பாம்பன் பாலம், தனுஷ்கோடி கடற்பகுதிகளில் அதிகளவில் வலம் வரும் இந்த பறவைகளை ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். மேலும் சில சமயங்களில் சீகல் பறவைகள் கூட்டமாக கரையோரங்களில் வலம் வந்து சுற்றுலா பயணிகள் மற்றும் குழந்தைகளை மகிழ்ச்சி அடைய வைக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in