

கூவத்தூரில் பத்திரிகையாளர் மீது அதிமுகவினர் (சசிகலா) நடத்திய தாக்குதலுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மொத்தமாக தங்க வைக்கப் பட்டிருக்கும் கூவத்தூர் சொகுசு விடுதிக்கு செல்லும் பாதையை மறித்து, ஊர்மக்களே நடமாட முடியாதபடி அராஜகம் செய்யும் அதிமுகவினர் (சசிகலா), அங்கு செய்தி சேகரிக்க வரும் ஊடகத்தினர் மீதும் இரு நாட்களாகக் கடுமையான தாக்குதலை நடத்தி வருகின்றனர். பெண் செய்தியாளர்களும் இழிவு படுத்தப்பட்டுள்ளனர்.
அதிமுகவின் இந்த அராஜகத்தைக் கண்டித்து ஊடகத்தினர் மறியலில் ஈடுபட்டு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
அரசும் சட்டம்-ஒழுங்கும் சீர்கெட்டு கிடக்கும் நிலையில், ஊடகத்தினர் மீது அதிமுகவினர் நடத்திய தாக்குதலை திமுக சார்பில் வன்மையாகக் கண்டிப்பதுடன், தாக்குதலை நடத்தியவர்கள் மீதும், அவர்களை ஏவியவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.