

தனுஷ்கோடிக்கு அருகே உள்ள 8-வது மணல் தீடையில் இலங்கை அரசு எந்தவித பெயர் பலகையையும் நிறுவவில்லை என அந்நாட்டு மீன்வளத் துறையினர் மறுத்துள்ளனர்.
ராமேசுவரம் அடுத்துள்ள தனுஷ்கோடியில் இருந்து இலங்கையின் தலைமன்னார் வரை கடல் பகுதியில் 13 மணல் தீடைகள் உள்ளன. தனுஷ்கோடியில் இருந்து முதல் 6 தீடைகள் இந்தியாவுக்குச் சொந்தமானவை. 7-ல் இருந்து 13 வரையிலான தீடைகள் இலங்கைக்குச் சொந்தமானவை. இதில் 6-வது மணல் தீடை சேது சமுத்திரத் திட்டப் பணிகளுக்காக தோண்டியபோது முற்றிலும் மூழ்கி விட்டது.
இந் நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நந்தகுமார் இருந்தபோது அவரது உத்தரவின்பேரில், தனுஷ்கோடி தலைமன்னார் இடையேயான 5 வது மணல்மேட்டுப் பகுதியில் இந்திய கடல் எல்லையை குறிக்கும் விதமாக ‘இந்தியா’ என்று எழுதப்பட்ட தகவல் பலகை 2014-ம் ஆண்டு ஜுலை மாதம் மாவட்ட நிர்வாகம் மூலம் நிறுவப்பட்டது.
மேலும் 5 வது மணல் தீடை கடல் பகுதியை தமிழக மீனவர்கள் கடந்து சென்று மீன் பிடிக்கக் கூடாது, இப்பகுதியில் சந்தேகப்படும் வகையில் மர்மப் படகுகள் எதுவும் ஊடுருவினால் மீனவர்கள் உடனடியாக இந்தியக் கடலோரக் காவல் படைக்கு தெரிவிக்க வேண்டும் என்று கடலோரக் காவல் படையினர் கேட்டுக்கொண்டனர்.
இந் நிலையில், இலங்கைக்குச் சொந்தமான 8-வது மணல் தீடையில் இலங்கை அரசு சார்பாக எல்லைப் பலகை வைக்கப்பட்டுள்ளதாகவும், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் வந்து விடாமல் இருக்க இந்த பலகை வைக்கப்பட்டுள்ளதாகவும் தொலைக்காட்சிகளில் நேற்று செய்திகள் வெளியாயின.
இது குறித்து யாழ்ப்பாணம் மாவட்ட மீன்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழக தொலைக்காட்சிகளில் வெளியான இலங்கை பெயர் பலகை யாழ்ப்பாணம் அருகே பருத்தித் துறையில் உள்ளது. இது சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக 2009-ம் ஆண்டு நிறுவப்பட்டது. மேலும் 8-ம் மணல் தீடையில் எந்த பெயர் பலகையும் நிறுவப்படவில்லை.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை தர உள்ள நிலையில், திட்டமிட்டே இந்திய தொலைக்காட்சிகள் இத்தகைய பொய்யான செய்திகளை வெளியிடுகின்றன. மேலும் இலங்கைக்குச் சொந்தமான பகுதியில் பெயர் பலகைகள் நிறுவ இந்தியாவிடம் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இலங்கைக்கு இல்லை என்றனர்.