

நுகர்வோர் கட்டியுள்ள வைப்புத் தொகைக்கு இந்த ஆண்டுக்கான ஒன்பது சதவீத வட்டியை வழங்க வேண்டுமென்று, மின் வாரியத்துக்கு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தர விட்டுள்ளது.
தமிழகத்தில் மின் வாரியத்திடம் ஒருவர் தனது கட்டிடத்துக்கு மின் இணைப்பு பெற, காப்புத் தொகை செலுத்த வேண்டும். இதில் ஒவ்வொரு வகையான நுகர்வோருக்கும், ஒவ்வொரு வகை யான கட்டணமும், வைப்புத் தொகையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வைப்புத் தொகை செலுத்து வோருக்கு வங்கியின் வட்டி விகிதப்படி, குறிப்பிட்ட வட்டியை வழங்க வேண்டுமென்று, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த வட்டித் தொகையானது, நுகர்வோரின் மின் இணைப்புக் கணக்கில் ஏற்கனவே இருக்கும் வைப்புத் தொகையுடன் சேர்க்கப்படும்.
இந்நிலையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர்கள் எஸ்.நாகல்சாமி, ஜி.ராஜகோபால் ஆகியோர் இரு தினங்களுக்கு முன் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:
இந்திய மின்சார சட்டம் 2003ன் பிரிவு 47, துணைப்பிரிவு 4ன் படி, நுகர்வோரின் காப்புத் தொகைக்கு, தமிழக மின்வாரியம் வட்டி அளிக்க வேண்டும். அதன் படி, 2013-14ம் ஆண்டுக்கான வட்டியாக, நுகர்வோரின் காப்புத் தொகையில் ஆண்டுக்கு ஒன்பது சதவீதம் கணக்கிட்டு, தமிழக மின் வாரியம் வழங்க வேண்டும். இந்தத் தொகையை அவரவர் மின் இணைப்புக் கணக்கில் சேர்த்து, அந்தக் கணக்கு விவரத்தை ஒவ்வொரு நுகர்வோருக்கும், வரும் ஜூன் 30க்குள் தகவல் தெரி விக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.