Published : 06 Jan 2017 08:08 AM
Last Updated : 06 Jan 2017 08:08 AM

சென்னையில் கடத்தப்பட்ட பெண் குழந்தை மீட்பு: வேலைக்கார பெண் கைது

அரும்பாக்கத்தில் வீட்டு வேலைக்கார பெண்ணால் கடத்தப்பட்ட ஒன்றரை வயது பெண் குழந்தையை போலீஸார் மீட்டனர். வேலைக்கார பெண்ணை கைது செய்தனர்.

சென்னை அரும்பாக்கம், ஜானகிராம் காலனியை சேர்ந்தவர் சீனிவாசன்(40). தொழிலதிபர். இவரது மனைவி கோபிகா (35). இவர்களின் ஒன்றரை வயது மகள் ஹாசினி. கடந்த திங்கள்கிழமை ஆந்திராவை சேர்ந்த பியூலா(28) என்ற பெண் இவர்களின் வீட்டில் வேலைக்கு சேர்ந்தார். அண்ணாநகரில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் இவரை வீட்டு வேலைக்கு சேர்த்தனர்.

கடந்த புதன்கிழமை மாலையில் வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஹாசினி காணாமல் போயுள்ளார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் குழந்தையை பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. வேலைக்கார பெண்ணும் காணாமல் போனதால் அவர்தான் குழந்தையை கடத்தி சென்றிருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.

இதுகுறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இப்புகாரின்பேரில் குழந்தையை கண்டுபிடிக்க அண்ணாநகர் உதவி கமிஷனர் சந்திரசேகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

பியூலாவின் செல்போன் சிக்னல்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் அவர் நெல்லூர் சென்றிருப்பது தெரிந்தது. அவரை பிடிக்க முயற்சி நடந்த நிலையில் அவரது செல்போன் சிக்னல் நேற்று காலையில் சென்னையை காட்டியது. ஓட்டேரி அருகே சுற்றிக் கொண்டிருந்த பியூலாவை நேற்று பிற்பகல் போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் இருந்து குழந்தை ஹாசினி மீட்கப்பட்டார்.

பியூலா திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். ‘குழந்தையை பார்த்தவுடன் அதை நானே வளர்க்கும் ஆசையில் கடத்தி சென்றேன்’ என்று விசாரணையில் பியூலா தெரிவித்துள்ளார். ஆனால், பியூலா குழந்தையை கடத்திச் சென்று விற்க திட்டமிட்டு இருப்பதும், அதற்காக ஆட்களை தேடிக்கொண்டு இருந்ததும் தெரியவந்துள்ளது. இந்த கடத்தலின் பின்னால் வேறு யார் இருக்கிறார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x