

ஓசூர் நில அளவையர் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் இக்ரமுல்லா குறித்து போலீஸ் விசாரணையில் பல தகவல்கள் தெரியவந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த நிலஅளவையர் குவளை செழியன் கடந்த மாதம் கடத்தப்பட்டு சேலம் அருகே கொலை செய்யப்பட்டு காரில் எரிக்கப்பட்டார்.
இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீஸார் விசாரித்து 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சேலத்தைச் சேர்ந்த இக்ரமுல்லா தலைமறைவாக உள்ளார். இந்நிலையில், போலீஸில் சரணடைய விரும்புவதாக அவ்வப்போது ‘வாட்ஸ் அப்’ மூலம் வாக்குமூலம் வெளியிட்டு வருகிறார்.
வாட்ஸ் அப் தகவல்
சில நாட்களுக்கு முன்னர் இக்ரமுல்லா பேசியதாக வெளியாகி இருக்கும் வாட்ஸ் அப் தகவலில், ‘எனது குடும்பத்தினர் என்னை ஒதுக்கிவிட்டனர். நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்’ என்று அழுதபடி கூறியிருந்தார்.
இந்நிலையில் இக்ரமுல்லா குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் வெளியாகி உள்ளன.
இக்ரமுல்லா சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் சேலம் அம்மாப்பேட்டையில் செல்போன் பழுது பார்க்கும் தொழில், அதன்பிறகு கணினி பயிற்சி மையம் மற்றும் செல்போன் விற்பனை மையம் நடத்தி வந்துள்ளார். பின்னர் மளிகை பொருட்களை ‘மல்டிலெவல்’ மார்க்கெட்டிங் முறையில் விற்பனை செய்யும் ‘விங்ஸ் கம்யூனிகேஷன்’ என்ற நிறுவனத்தை நடத்தியுள்ளார்.
கவர்ச்சிகரமான விளம்பரங்கள்
அப்போது, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.20-க்கு கிடைக்கும் என்று கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு, மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இத்தொழிலின்போது கார்த்திகேயனியின் நட்பு கிடைத்துள்ளது. மேலும், குவளை செழியன் கொலை வழக்கில் கைதாகியுள்ள கலைவாணனுடனும் நட்பு ஏற்பட்டது. அன்று தொடங்கிய இக்ரமுல்லா, கார்த்திகேயனி, கலைவாணன் ஆகியோரது கூடாநட்புதான் குவளை செழியனை கொலை செய்யும் அளவுக்கு கொண்டு சென் றுள்ளது.
குவளை செழியன் கொலை வழக்கில் இக்ரமுல்லாவை போலீஸார் தேடத் தொடங்கிய பின்னர், அவரது குடும்பத்தினர் வசிக்கும் இடம் இக்ரமுல்லாவின் நண்பர்களுக்குக் கூட தெரிய வில்லை. ‘வாட்ஸ் அப்’ மூலம் இக்ரமுல்லா வெளியிட்டு வரும் தகவலில், கிருஷ்ணகிரி டிஎஸ்பி கண்ணனிடம் சரணடையப் போவதாக ஒவ்வொரு முறையும் கூறி வருகிறார். ஆனால் இதுவரை சரண் அடையவில்லை.