Published : 19 Mar 2014 03:20 PM
Last Updated : 19 Mar 2014 03:20 PM

பாஜக கூட்டணி தொகுதிப் பங்கீட்டுப் பட்டியல் வியாழக்கிழமை வெளியீடு

பாஜக கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டுப் பட்டியல் நாளை (வியாழக்கிழமை) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளது உறுதியாயனது.

தமிழக பாஜக இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை மதியம் 12 மணிக்கு சென்னையில் செய்தியாளர்களைச் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பாஜக கூட்டணி கட்சிகளுக்கு இறுதி செய்யப்பட்ட தொகுதிப் பட்டியலை இந்தச் செய்தியாளர் சந்திப்பில் அவர் வெளியிடுவார் என உறுதிபடத் தெரிகிறது.

அப்போது, தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச் செயலர் வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உடன் இருப்பார்கள் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. ஆனால், ஆரம்பத்தில் இருந்தே தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டது.

சில தொகுதிகளை பாமகவும் தேமுதிகவும் விடாப் பிடியாக கேட்டதால் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. நீண்ட நாட்களாக இழுபறி நிலையே நீடித்தது. அதே நேரத்தில் பாஜக தலைவர்களும் நிர்வாகிகளும் கூட்டணியில் பிளவு ஏற்படக் கூடாது என்பதில் அதிக அக்கறை காட்டினர். தேமுதிக, பாமக தலைவர்களிடம் தொடர்ந்து பேசி, சிக்கலைத் தீர்க்க முயன்று வந்தனர்.

தொகுதிப் பங்கீடு முடிவாகாத நிலையில், 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, ஏற்கெனவே அறிவித்தபடி தனது தேர்தல் பிரச்சாரத்தை தேமுதிக தலைவர் விஜயகாந்த் கும்மிடிப்பூண்டியில் தொடங்கினார். அதேவேளையில், நரேந்திர மோடிக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்து கூட்டணியை அவர் உறுதி செய்தார்.

இதனிடையே, பாமக உடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை இழுபறி நீடித்த நிலையில், தருமபுரி வேட்பாளராக அன்புமணி ராமதாஸை அக்கட்சி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

உத்தேசப் பட்டியல்

தேமுதிக 14, பாஜக - 8, பாமக - 8, மதிமுக – 7, மற்ற கட்சிகளுக்கு தலா ஒரு இடம் என கூட்டணி முடிவாகியுள்ளதாக தெரிகிறது.

யாருக்கு எந்தெந்த தொகுதி?

தேமுதிக:

திருவள்ளூர் (தனி), வடசென்னை, மத்திய சென்னை, விழுப்புரம் (தனி), கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, திண்டுக்கல், பொள்ளாச்சி, நாமக்கல், திருவண்ணாமலை, கடலூர், மதுரை, நெல்லை.

பாஜக:

கன்னியாகுமரி, கோவை, தென்சென்னை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, பெரும்புதூர், தஞ்சாவூர்

பாமக:

தருமபுரி, அரக்கோணம், ஆரணி, சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, வேலூர்

மதிமுக:

விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, தேனி, கரூர், காஞ்சிபுரம், ஈரோடு

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி:

திருப்பூர்

இந்திய ஜனநாயக கட்சி:

பெரம்பலூர்

பாஜக கூட்டணி, பாஜக, தேமுதிக, பாமக, ராஜ்நாத் சிங், மக்களவைத் தேர்தல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x