Last Updated : 28 Jan, 2017 12:13 PM

 

Published : 28 Jan 2017 12:13 PM
Last Updated : 28 Jan 2017 12:13 PM

நகராட்சிக்கான அடையாளம் ஏதுமில்லா நாகூர்: அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஆவன செய்யப்படுமா?

பூர்வகுடிகளான நாகர்களின் ஊர் என்ற வரலாற்று தொன்மை மிகுந்த ஊர். இஸ்லாமியர்களின் மிக முக்கியமான வழிபாட்டுத்தலம். நாகூர் ஆண்டவர் என்றழைக்கப்படும் ஷாகுல் ஹமீது ஒலியுல்லா 28 ஆண்டுகள் வாழ்ந்து அற்புதங்கள் பல நிகழ்த்தி மறைந்த ஊர் ஆகிய சிறப்புகளைப் பெற்றது நாகூர்.

இங்குள்ள நாகூர் ஆண்டவரின் தர்காவுக்கு முஸ்லிம்கள் மட்டுமில்லாமல் அனைத்து மதத்தினரும் வந்து வழிபடுகிறார்கள். சர்வசமய பிரார்த்தனை தலமாக இது திகழ்கிறது. இங்கு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்களும், சந்தனக்கூடு உள்ளிட்ட விழாக் காலங்களில் பல லட்சம் பேரும் வந்து செல்கிறார்கள். அப்படிப்பட்ட புனிதத் தலம் குப்பையும், கூளமும் நிரம்பி வழியும் ஊராக, எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத அசுத்தமான சிற்றூராக இருக்கிறது.

நாகூர் ரயில் நிலையத்தில் வந்து இறங்கும் பயணிகள் தங்கள் காலைக் கடன்களை முடிக்கவோ, குளிக்கவோ முடியாதவகையில் தண்ணீர் வசதி இல்லாததால் பரமாரிப்பின்றி பூட்டிக் கிடக்கிறது கழிவறை.

பேருந்து வசதியில்லை…

ரயில் நிலையத்திலிருந்து தர்கா ஒருகிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பேருந்து வசதி கிடையாது, சீமைக் கருவேல மரங்கள் சூழ்ந்திருப்பதால் நடந்துசெல்ல முடியாது. ரயில் நிலையத்தில் பயணிகள் தங்குமிடமும் கிடையாது. பிளாட்பாரத்தை விட்டால் வேறு வழியில்லை. இதனால் ரூ.100 கொடுத்து ஆட்டோவில்தான் செல்ல வேண்டும். பயணச்சீட்டு வாங்க, முன்பதிவு செய்ய என்று எல்லாவற்றுக்கும் ரயில் நிலையத்தில் ஒரே கவுன்ட்டர் மட்டுமே இருப்பதால் எப்போதும் கூட்டமாகவே உள்ளது.

நாகூர் நகருக்குள் நுழையவே முடியாத அளவு போக்குவரத்து நெருக்கடி. 15 அடி அகலமுள்ள சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்ததுபோக மீதமுள்ள சொற்ப இடத்தில் முண்டியடித்துக்கொண்டு தர்கா அருகே சென்றால், அங்கே வாகனங்களை நிறுத்தக்கூட ஏற்பாடு எதையும் செய்யாத நகராட்சி நிர்வாகத்தின் மூலம் டெண்டர் பெற்று வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கின்றனர். ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்த வேண்டும்.

பாழடைந்த திடல் போல…

பேருந்து நிலையம் என்ற எண்ணத்தை முற்றிலும் சீர்குலைக்கும் வகையில் உள்ளே எந்த பேருந்தும் செல்லாததால் பாழடைந்த பழைய ஊர்த்திடல்போல கிடக்கிறது நாகூர் பேருந்து நிலையம். சில தனியார் வாகனங்களும், பன்றி, நாய் உள்ளிட்டவையும் தான் அங்கு திரிகின்றன. சாலையின் நடுவிலேயே பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கி விடுகின்றனர். குறுகலான சாலை என்பதால் எந்த நேரமும் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது, புகைமண்டலம் சூழ்ந்திருக்கிறது.

நாகூர் கடற்கரையோ மிகமிக மோசமாக பராமரிப்பில்லாமல் கிடக்கிறது. முழுவதும் மரங்கள் சூழ்ந்திருப்பதால் அச்சத்தை ஏற்படுத்தும்விதமாக இருக்கிறது. ஹைமாஸ் விளக்குகள் இருந்தாலும் இரவில் எப்போதாவது ஒரே ஒரு விளக்கு மட்டும் எரியும் என்று கூறுகின்றனர். அங்கிருக்கும் 2 கடைக்காரர்களும் மாலை 6 மணிக்கு முன்னதாகவே அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விடுவார்களாம். குப்பையும், சாக்கடையும் அங்கிங்கெனாதபடி கடற்கரை பகுதி எங்கும் விரவியிருக்கின்றன.

பூங்காவில் சீமைக் கருவேல மரங்கள்…

வெளிநாட்டு தொண்டு நிறுவனம் கடற்கரை அருகே சில்லடியில் அழகான பூங்கா ஒன்றை அமைத்து தந்திருக்கிறது. அதனை நாகப்பட்டினம் நகராட்சி சார்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பித்ததாக கல்வெட்டு ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு பூங்கா எப்படி இருக்கக் கூடாதோ அப்படித்தான் இருக்கிறது இந்த பூங்கா. அழகான மர வேலைப்பாடுகள் நிறைந்த பூங்கா முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் மண்டிக்கிடக்கின்றன. மற்றபடி புல்வெளி, மலர் தோட்டம், அழகான மரங்கள், இயற்கையான நடைபாதை, நீர் அருவி என்று எதையும் அங்கு எதிர்பார்க்கக் கூடாது.

பல தெருக்களில் மலைபோல குப்பை கிடக்கின்றன. பட்டினச்சேரி முழுவதும் பல நாட்களாக அகற்றப்படாமல் குப்பை கிடக்கிறது. நகரில் சாலைகள் மிகவும் மோசம். புதை சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டு அதன் ஒப்பந்தகாலம் முடிவடைந்த பின்னரும் பணிகள் முடிக்கப்படவில்லை. பல இடங்களுக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறதாம். மொத்தத்தில் ஒரு நகராட்சி என்பதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் உள்ளது நாகூர்.

பாழ்பட்டுப் போன ஆற்றங்கரை

இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மைப் பிரிவு தலைவர் நாகூர் நவுசாத் கூறியது:

வெட்டாற்றங்கரையில் பழைய பனங்குடி சாலையில் நாகப்பட்டினம் நகராட்சி குப்பை கொட்டப்படுகிறது. அதனால் அழகான ஆற்றங்கரை பாழ்பட்டுக் கிடக்கிறது. அத்துடன் வாஞ்சூர் தனியார் துறைமுகத்தின் சிலவகை கழிவுகளையும் இங்கு கொண்டு வந்து கொட்டுகிறார்கள். இதனால் குப்பையால் ஊர் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

அந்த இடத்தில் குப்பை கொட்டுவதை தவிர்த்து நாகூர் பேருந்து நிலையம் அமைத்தால் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் குறைந்துவிடும்.

அங்கிருந்து நாகப்பட்டினத்துக்கு பைபாஸ் சாலை வழியாகச் செல்லலாம். இதைச் செயல்படுத்தினால் குப்பைக்கும், நகரின் போக்குவரத்து நெருக்கடிக்கும் தீர்வு கிடைக்கும்.

பராமரிக்கப்படாத தங்கும் விடுதி

நாகூர் முஸ்லிம் சங்கத் தலைவர் சாதிக் கூறியது:

நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன் தர்காவுக்குச் சொந்தமான இடங்களையும் மீட்க வேண்டும். வாய்க் கால்கள், ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நகராட்சிக்குச் சொந்தமான தங்கும் விடுதி பராமரிக்கப்படாமல் பூட்டிக்கிடப்பதால் பக்தர்கள் தனியார் விடுதிகளில் தங்க வேண்டியுள்ளது.

நகராட்சியின் தங்கும் விடுதியைப் புனரமைத்து பக்தர்கள் தங்க அனுமதிக்க வேண்டும்.

சீரமைக்க விரைந்து நடவடிக்கை

நாகப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளருமான தமிமுன் அன்சாரி கூறியது:

நாகூர் மிக மோசமான நிலையில்தான் இருக்கிறது. அதனால் தான் முழு கவனத்தையும் செலுத்தி நாகூரைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். முழுவதுமாக ஆராய்ந்து இதற்காக 5 அம்சத் திட்டங்களைத் தயாரித்து அவற்றை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகத்துடன் பேசிக்கொண்டிருக்கிறேன்.

நகரில் சாலைகளை மேம்படுத்துதல், வீதிகளில் குப்பை கொட்டுவதை மக்கள் பங்களிப்புடன் மாற்றியமைப்பது, நகரில் உள்ள குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளைப் பாதுகாப்பது, பேருந்து நிலையம் சீரமைப்பு, ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, கடற்கரையைச் சீரமைத்து சுற்றுலாத் தலமாக்குவது ஆகிய 5 அம்சத் திட்டங்களுடன் சேர்த்து பூங்காவை தனியார் தொண்டு நிறுவனம் மூலம் புனரமைத்துப் பராமரிப்பது, நாகூரில் இருந்து புதிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல திட்டங்களை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x