

கொடைக்கானல் மலைக்கிராம மக்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி, நக்சலைட்டுகள் ஊடுருவாமல் தடுக்க போலீஸார் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் என மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
கொடைக்கானலில் நேற்று அவர் கூறியதாவது: கொடைக்கானல் பாதரச தொழிற்சாலையில் பணிபுரிந்து பாதிக்கப்பட்டவர்களில், இதுவரை நிவாரணம் கிடைக்காத 600 பேருக்கு நிவாரணத் தொகை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொடைக்கானல் மலைக் கிராமங்களில் வசிப்பவர்கள் திறந்தவெளியையே கழிப்பிடமாகப் பயன்படுத்துவது வேதனை அளிக்கிறது. பிரதம மந்திரி கழிவறைத் திட்டத்தின் கீழ், மூன்று மாதங்களுக்குள் மலைக்கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கழிப்பறை கட்டவும், இட வசதி இல்லாதவர்களுக்கு பொதுக் கழிப்பறைகள் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கொடைக்கானல் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண கீழ்குண்டாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். கொடைக்கானல் மலைக் கிராமங்களில் உள்ள ஆதிவாசிகள், பழங்குடியின மக்களின் ஏழ்மை நிலையைப் பயன்படுத்தி நக்சலைட்டுகள் ஊடுருவி மலைக் கிராம மக்களுக்கு பயிற்சி கொடுக்காமல் தடுக்க போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடவேண்டும், என்றார்.
முன்னதாக, வில்பட்டியில் மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு செய்தார். கோயில்களில் கட்டண தரிசனத்தை ரத்து செய்யக் கோரி, இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.