

மார்ச் 30-ம் தேதி அல்லது அதற்கு பிறகு காலாவதியான கட்டிட திட்ட அனுமதிகளுக்கு கால நீட்டிப்பு வழங்க சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் விஜயராஜ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
கட்டிடங்கள் கட்டுவதற்கு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் திட்ட வரை பட அனுமதி பெற வேண்டும். இதுவரை திட்ட அனுமதியாக 3 ஆண்டுகள் வழங் கப்பட்டு வந்தது. 3 ஆண்டுகள் முடிந்தும் கட்டுமான பணிகள் முடியாதபட்சத்தில், மீண்டும் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். இதனால் பல பெரிய கட்டிடங்களின் கட்டுமான பணிகள் உரிய காலத்தில் முடிப்பது சிக்கலாக இருந்தது. மேலும் கட்டுமான பொருள்கள் பற்றாக்குறை, தொழிலாளர் பற்றாக்குறை உள்ளதால், பணிகளை முடிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று கட்டுமான நிறுவனங்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் கட்டிட திட்ட வரைபட அனுமதி காலத்தை 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக உயர்த்தி தமிழக அரசு சட்டத் திருத்தம் செய்து அறிவித்தது. ஆனாலும் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தி சிஎம்டிஏ நிர்வாகம் அறிவிப்பு வெளியிடாமல் இருந்தது. தற்போது இதற்கான உத்தரவை சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அண்மையில் வெளியிட்டுள்ளார்.
இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ள தாவது: கட்டிட வரைபட அனுமதியை 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டு களாக உயர்த்தி சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 30-ம் தேதியோ அல்லது அதற்கு பிறகோ வரைபட அனுமதி காலாவதியாகும் பணிகளுக்கு மட்டும் கட்டிட வரைபட காலநீட்டிப்பு வழங்கலாம்.
மேலும் மார்ச் 30-ம் தேதிக்கு முன்பாக வரைபட நீட்டிப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும் நீட்டிப்பு வழங்கலாம். சிஎம்டிஏ கட்டுப்பாட்டில் வரும் கட்டிடங்களுக்கு சிஎம்டிஏ-வும், உள்ளாட்சி அமைப்புகளின்கீழ் வரும் கட்டிடங்களுக்கு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளும் கால நீட்டிப்பு வழங்கலாம் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.