Published : 21 Feb 2017 09:43 AM
Last Updated : 21 Feb 2017 09:43 AM

காரைக்கால், நெடுவாசல் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை

காரைக்கால் மற்றும் புதுக்கோட்டை நெடுவாசல் பகுதிகளில் மேற் கொள்ளப்படவுள்ள கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என புதுச்சேரி இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து இவ்வியக்கத்தின் தலைவர் எஸ்.ஆனந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

காரைக்கால் மற்றும் புதுக் கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில் எண் ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தங்களுக்கு மத்திய அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி, நெடுவாசலில் 10.01 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வயலுக்கு ‘ஜெம் லேபரெட்டரிஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்துக்கும், காரைக்காலில் 10.4 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள எண் ணெய் வயலுக்கு ‘பாரத் பெட்ரோ ரிசோர்ஸஸ் லிமிடெட்’ என்ற நிறு வனத்துக்கும் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

2006-ம் ஆண்டு மத்திய அரசு பிறப்பித்த சுற்றுப்புறச் சூழல் தாக்க மதிப்பீடு அறிவிப்பின்படி, இங்கு மாசு ஏற்படும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யப்படவில்லை. மக்கள் கருத்தறியும் கூட்டமும் நடத்தப்படவில்லை.

கச்சா எண்ணைய்யில் இருந்து வெளிவரும் கரிம கலவைகளால் புற்றுநோய், குறைப்பிரசவம் போன்ற பாதக விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. நிலத்தடி நீர்மட்டமும் குறையும். ஏற்கெனவே வறட்சியால் மாவட்டம் பாதிக் கப்பட்டு வரும் நிலையில், மேலும் பூமியைக் குடைந்து நிலத்தடியில் வெற்றிடத்தை ஏற்படுத்தினால் பூகம்பம் நேரிடும் ஆபத்தும் ஏற்பட வாய்ப்பாகும்.

எனவே, இத்திட்டத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். புதுச்சேரி அரசும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x