

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கீதாலட்சுமி தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவிகள் சந்தேகத்துக்கு இடமான வகையில் இறந்தனர்.
இதனையடுத்து அக்கல்லூரிக்கு சீல் வைக்கப்பட்டு அக்கல்லூரியின் முதல்வர் கலாநிதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் எஸ்.கீதாலட்சுமி, "விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும் அந்தக் கல்லூரி இயங்கியுள்ளது.
இது குறித்து விசாரணைக் குழு அமைத்து தகுந்த விசாரணை மேற்கொள்ளப்படும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளிலேயே சேர்க்க வேண்டும்" என்றார்.