சாதகமான தீர்ப்பு வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.1 கோடி மோசடி: 4 பேர் சேலம் சிறையில் அடைப்பு

சாதகமான தீர்ப்பு வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.1 கோடி மோசடி: 4 பேர் சேலம் சிறையில் அடைப்பு
Updated on
1 min read

நாமக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்ற குடும்ப சொத்து பிரிப்பது தொடர்பான வழக்கில் சாதகமான தீர்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி, பெண் தொழிலதிபரிடம் ரூ.1 கோடி மோசடி செய்த 4 பேரை நாமக்கல் சிபிசிஐடி போலீஸார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ஜெயசித்ரா(35). அவரது குடும்ப சொத்துகள் தொடர்பாக நாமக்கல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் ஜெயசித்ரா குடும்பத்துக்கு சாதகமாக தீர்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி, சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த அண்ணாதுரை(49) என்பவர் கடந்த ஆண்டு அறிமுகமாகி உள்ளார். மேலும், நாமக்கல் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த ஒருவரை தனது சகோதரி எனவும் கூறியுள்ளார்.

சிபிசிஐடி போலீஸார்

இதை நம்பி ஜெயசித்ரா, அண்ணாதுரையிடம் ரூ.1 கோடி கொடுத்ததாகக் கூறப்படு கிறது. ஆனால் சொத்து வழக்கு முடிவுக்கு வராமல் தொடர்ந்துள்ளது. இதனால் அண்ணாதுரை மீது நம்பிக்கை இழந்த ஜெயசித்ரா பணத்தை திருப்பித் தரும்படி கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை திருப்பி தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் ஏமாற்றம் அடைந்த ஜெயசித்ரா, நாமக்கல் சிபிசிஐடி போலீஸாரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் கொடுத்தார். அதன்பேரில் ஆய்வாளர் பிருந்தா, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட வழக்கில் அண்ணாதுரை மற்றும் அவரது நண்பர்களான திருச்செங்கோட்டைச் சேர்ந்த ஜெயன் என்ற ஜெயந்தன், ரவிசங்கர், ராஜசேகர் ஆகிய 4 பேரையும் சிபிசிஐடி போலீஸார் நேற்று முன்தினம் இரவு கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

பணியிடை நீக்கம்

மேற்குறிப்பிட்ட புகார் தொடர் பாக நாமக்கல்லில் பணிபுரிந்த வந்த நீதிபதி, கடந்த பிப்ரவரி மாதம் ஓய்வுபெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in