

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் விரைவில் முறைப்படி நடத்தப்படும். ஜெயலலிதாவின் சொத்துகளைப் பாதுகாக்க சொத்து பாதுகாப்புக் குழு அமைக்கப்படும் என்று இ.மதுசூதனன் கூறினார்.
அதிமுக அவைத் தலைவராக இருந்த இ.மதுசூதனன் தற்போது, முதல்வர் ஓபிஎஸ் அணியில் உள்ளார். சென்னை யில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று மாலை கூறியதாவது:
அதிமுகவில் இருந்து என்னை நீக்குவதாக அந்த அம்மையார் அறிவித்துள்ளார். அதற்கு முன்னதாகவே நான் அந்த அவரை நீக்கிவிட்டேன். எம்ஜிஆர் உருவாக்கிய விதிகளின்படி, அடிமட்ட கட்சி உறுப்பினர்கள்தான் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய வேண்டும். தற்காலிக பொதுச் செயலாளர் என்பது அதிமுக வரலாற்றிலேயே இல்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, பொதுச் செயலாளராகும்போதுகூட, முதலில் தேதியை அறிவித்துவிட்டு, அதன் பிறகுதான் தேர்தல் நடத்துவார். யாரும் விண்ணப்பிக்காவிட்டால், ஒருமனதாக ஜெயலலிதாவே பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்படுவார். ஆனால், சசிகலா தற்போது கட்சி உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படவில்லை.
எனவே, கட்சித் தொண்டர்களே தயாராகுங்கள். பொதுச் செயலாளர் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும். அதிமுகவின் உண்மையான பொதுச் செயலாளர் யார் என்பதை, கொடிகட்டுகிற அடிப்படைத் தொண்டர்கள் மிக விரைவில் முடிவெடுப்பார்கள். ஜெயலலிதாவின் சொத்து களைப் பராமரிக்க, கட்சியின் சொத்து பாதுகாப்புக் குழுவை யும் பொதுக்குழு விரைவில் அறிவிக்கும்.