Published : 12 Aug 2016 08:26 AM
Last Updated : 12 Aug 2016 08:26 AM

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் 5 சன்னதிகளுக்கு 22-ம் தேதி கும்பாபிஷேகம்: திருப்பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை அமைச்சர் ஆய்வு

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் உள்ள யோகநரசிம்மர், வரதராஜ சுவாமி, குளக்கரை ஆஞ்சநேயர் உட்பட 5 சன்னதிகளுக்கு வரும் 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. திருப்பணிகள், விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நேற்று பார்வையிட்டார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்று. புராதனமிக்க இத்தலத்தில் யோகநரசிம்மர், வரதராஜசுவாமி, திருமழிசையாழ்வார், கருடாழ்வார், குளக்கரை ஆஞ்சநேயர் சன்னதி களுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இந்த சன்னதிகள், அதன் விமானங்கள், பின்கோபுர வாசல் விமானம், பாண்டி கோபுரம், நரசிம்மர் கல்யாண மண்டபம், நரசிம்மர் மண்டபத்தின் மேல் தளம், கீழ் தளங்கள், குளக்கரை ஆஞ்சநேயர் சன்னதியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு கடந்த மாதம் 10-ம் தேதி திருப்பணிகள் தொடங்கப்பட்டன.

தொல்லியல் துறை வல்லுநர்களின் ஆலோசனைப்படி, பழமை மாறாமல் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக ரூ.95 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் ரூ.55 லட்சம் மதிப்பில் சுவாமி கிரீடம், கர்ணபத்திரம், சடகோபம், கவசங்களுக்கு தங்கரேக் பதிக்கும் பணியும், கோபுர கலசங்களுக்கு தங்கநீர் தோய்க்கும் பணியும் நடந்துள்ளது. முதல் முறையாக நரசிம்மருக்கு சொர்ண பந்தனமும், கஜேந்திர வரதராஜ சுவாமிக்கு ரஜத பந்தனமும் பொருத்தப்பட உள்ளன.

இந்நிலையில், முதல்வர் ஜெய லலிதாவின் உத்தரவுப்படி, மேற்கண்ட சன்னதிகளுக்கான கும்பாபிஷேகம் துர்முகி ஆண்டு ஆவணி 6-ம் தேதி, அதாவது வரும் 22-ம் தேதி திங்கள்கிழமை நடத்தப்பட உள்ளது. யாகசாலைகள் அமைக்கும் பணி வரும் 18-ம் தேதி தொடங்குகிறது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சி, காவல், தீயணைப்பு, சுகாதாரத் துறைகளுடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன. திருப்பணிகள் மற்றும் விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், துறை ஆணையர் மா.வீரசண்முகமணி மற்றும் துறை அலுவலர்கள் 11-ம் தேதி (நேற்று) பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x