

ஏழை மாணவி மேகலாவின் மருத்துவப் படிப்புக்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்ட முதல்வர் ஜெயலலிதா, முதலாண்டு கட்டணமாக ரூ.75 ஆயிரத்தை மேகலாவிடம் வழங்கினார்.
இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்தியில், ''புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியம், கீரமங்கலம், அணவயல் பூசாரியைச் சேர்ந்த மாணவி மேகலா, தனக்கு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கு இடம் கிடைத்துள்ள நிலையில், தானும், தனது குடும்பமும் ஆடு மேய்த்து பிழைப்பு நடத்தி வருவதாகத் தெரிவித்து, மருத்துவப் படிப்புக்கு நிதியுதவி வழங்க வேண்டி முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை வைத்தார்.
இக்கோரிக்கையை ஏற்று முதல்வர், மாணவி மேகலாவின் மருத்துவப் படிப்புக்கான முழு செலவையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். அதன்படி இன்று மேகலா உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை நேரில் வரவழைத்தார்.
முதலாம் ஆண்டு மருத்துவப் படிப்புக்கான கல்லூரிக் கட்டணம், விடுதிக் கட்டணம், புத்தகக் கட்டணம் உட்பட மொத்தம் ரூ.75 ஆயிரத்துக்கான வரைவோலையை அம்மா நல அறக்கட்டளையில் இருந்து வழங்கி, வாழ்த்து தெரிவித்தார். முதல்வருக்கு மேகலாவும், அவரது குடும்பத்தினரும் நன்றி தெரிவித்தனர்'' என்று கூறப்பட்டுள்ளது.